Published : 06 Jun 2019 12:00 PM
Last Updated : 06 Jun 2019 12:00 PM

நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை; தமிழகம் இதுவரை காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்; சீமான் எச்சரிக்கை

'நீட்' தேர்விலிருந்து விலக்களிக்காவிட்டால், தமிழகம் இதுவரை காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும் என எச்சரிக்கிறேன் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிலிட்டும், பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தீக்குளித்தும் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி சொல்லொணாத் துயரத்தையும், பெரும் மனவலியையும் தருகிறது.

அனிதாவை இழந்துவிட்டு அதற்கே இன்னும் நீதி கிட்டாத நிலையில் ரிதுஸ்ரீயும், வைஷியாவும் உயிரிழந்திருப்பது பெரும் ரணத்தையும், வேதனையையும் அளிக்கிறது. அநீதி இழைக்கப்படுவது கண்கூடாகத் தெரிந்தும் அதற்கெதிராக எதுவும் செய்ய இயலா கையறு நிலையில் நிற்கிறோமே? எனும் ஆற்றாமையும், அடக்கவியலா பெருங்கோபமும் நெஞ்சினுள் வன்மத்தை விதைக்கிறது.

'நீட்' தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் மரணம் என்பது வெறுமனே தற்கொலை அல்ல! மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப் படுகொலை.

அவர்களை இழந்து வாடும் இருவரின் குடும்பத்தினரையும் என்ன சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை. அவர்களை ஆற்றுப்படுத்தவும், மீட்டுக் கொண்டு வரவும் எந்த வார்த்தைகளைச் சொல்வதென்றும் தெரியவில்லை. அக்குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணை நிற்கும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.

'நீட்' தேர்வில் தோல்வியுற்றதற்காக உயிரை விடும் எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற தமிழ் மாணவர்கள் ஒருபோதும் நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். போராடி வாழ்க்கையை வென்று கனவிலே வெற்றிபெற உள்ள உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.

ஒரே மாதிரியான கற்றல் முறைகள் இல்லாத நாட்டில் ஒற்றைத்தீர்வு முறையைக் கொண்டு வருவது இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திற்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கும் எனத் தொடக்கத்திலிருந்தே இத்தேர்வு முறையைக் கல்வியாளர்கள் தொடங்கி பலதரப்பட்டத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எதிர்த்து வருகிறார்கள்.

மேலும், கிராமப்புற மாணவர்களும், பின்தங்கியப் பொருளாதாரத்தைக் கொண்ட மாணவர்களும் மருத்துவராவதை இத்தேர்வு முறை முற்றுமுழுதாகத் தகர்க்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதியே கருத்துத் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு 'நீட்' தேர்வு முறையால் அனிதாவின் உயிரை அநியாயமாக இழந்தோம்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் கிளர்ந்தெழுந்து ஒற்றைக்குரலில் ஒருமித்துக் குரலெழுப்பியப் பிறகு, கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அதற்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இதனால், அனிதா, பிரதீபா, ரிதுஸ்ரீ, வைஷியா என தமிழக மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது.

எட்டுகோடி தமிழ் மக்களின் பிரநிதித்துவத்தைப் பெற்ற தமிழக அரசின் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் அதனைக் கிடப்பில் போட்டிருக்கும் மத்திய அரசின் செயல் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் ஜனநாயகப் படுகொலையாகும். அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியது ஜனநாயகப் பேராற்றல்களின் பெருங்கடமை.

'நீட்' தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக் கனவோ பறிபோகக்கூடாது என்பதில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, தமிழக அரசு மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தமும், பெரும் நெருக்கடியும் தந்து 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினைப் பெற்றுத் தர வேண்டும்.

ஆகையினால், 'நீட்' தேர்விலிருந்து விலக்குக்கோரி தமிழகச் சட்டப்பேரவையில் இடப்பட்டத் தீர்மானத்திற்கு ஒப்புதலைப் பெற உடனடியாக ஆவன செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு எட்டுகோடித் தமிழ் மக்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து உடனடியாக அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தமிழகம் இதுவரை காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும் என எச்சரிக்கிறேன்" என சீமான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x