

திருவண்ணாமலை அருகே ரூ.27 லட்சத்தில் அமைக்கப்பட்ட மாதிரிப் பள்ளியை, ஆட்சியர் கந்தசாமி நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ரூ.27 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார்.
இந்தப் பள்ளியில் வண்ணத் தோட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன மேஜை மற்றும் இருக்கைகள், கணினி புரொஜெக்டர், கண்காணிப்பு கேமரா, குளிர்சாதன வசதி, புத்தகப் பைகளை வைக்க தனி அலமாரி, பறவைகள் கூண்டு, நூலகம், செய்தித்தாள்கள் வாசிக்கும் அறை, பிரத்யேக சமையலறை மற்றும் உணவுக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்று தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளும் உள்ளன.
நடப்புக் கல்வியாண்டில் இப்பள்ளியில் 23 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 53 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயசுதா, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, மாவட்டக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உட்பட பலர் பள்ளித் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.