

அரசியல் காரணங்களுக்காக மாணவர்களிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தும் தலைவர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''25 ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கை வேறு. அப்பொழுது கணினி யுகம் என்று ஒன்று கிடையாது. அப்போது வேலைவாய்ப்புகள் என்பவை அந்தந்த மாநிலங்களுக்குள்ளாகவோ, அந்த நாட்டுக்குள்ளாகவோ இருக்கும். இப்போது வேலைவாய்ப்புகள் பரந்து கிடக்கும்போது, இளம் வயதிலேயே இன்னொரு மொழியைப் படித்தால் நல்லது. இதுதான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை.
தமிழகத்தில் எதை எடுத்தாலும் அரசியல் ஆக்க வேண்டும் என்கின்றனர். பாரதியாரின் தலைப்பாகை. அதாவது நம் தேசத்தின் மூவர்ண நிறம் வரவேண்டும் என ஓவியர் வரைந்திருக்கிறார். அதை பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருக்கக் கூடாது என்கின்றனர். இந்த அளவுக்கு விமர்சனத்தைச் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட எதிரி விமர்சனத்தை வைத்து அரசியல் செய்யமுடியாது என்பதை பாஜக தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லும்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். ஆனால் இது ஊக்கப்படுத்தப்படக் கூடாது. தமிழக அரசியல்வாதிகளை இதில் குற்றம் சாட்டுவேன். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்குத் தொடர்ந்து அவநம்பிக்கையை ஊட்டக்கூடாது. இதைச் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். இவர்கள் வந்தால் நீட் ரத்து செய்யப்படுமோ என்று மாணவர்கள் எண்ணுகிறார்கள்.
தயவுசெய்து மாணவர்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள். இந்தியா முழுவதும் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. கிராமப்புற மாணவிகள் தேர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறார்கள். மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் ஏன் பாராட்ட மறுக்கிறீர்கள்?'' என்றார் தமிழிசை.