Published : 27 Jun 2019 04:34 PM
Last Updated : 27 Jun 2019 04:34 PM

‘ஆசிர்வாதம் செய்யவேண்டும்’ ஆசை வார்த்தைக்காட்டி வயதானவர்களிடமிருந்து நகைப்பறிப்பு: ஆட்டோ ஓட்டுநர் கைது

’பணக்காரர்கள் வீட்டில் பூஜை ஆசிர்வாதம் செய்யவேண்டும்’ என வயதான பெண்களிடம் நூதன முறையில் ஆசை வார்த்தை கூறி தங்க நகைகளை பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம்முதல் தொடர்ச்சியாக வயதான மூதாட்டிகள், வீட்டு வாசல் மற்றும் கடைகளில் உட்காந்திருப்பவர்களை குறிவைத்து ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் நூதனமுறையில் கவனத்தை திசைத்திருப்பி நகைகளை பறித்துச் செல்வதாக போலீஸாருக்கு தொடர் புகார் வந்தது.

தனியாக அமர்ந்திருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களிடம் சென்று அருகில் உள்ள வட இந்திய சேட்டு வீட்டில் கிரஹபிரவேசம் நடக்கிறது, வயதான நீங்கள் வந்து அவர்களை ஆசீர்வதித்தால் 1000 ரூபாய் பணமும் சேலையும் தருவார்கள் என ஆசை வார்த்தை கூறுவாராம்.

எனக்கு தெரிந்தவர்கள், யாரையாவது அழைத்து வரச்சொன்னார்கள், நீங்கள் சும்மா இருந்தால் வாருங்கள் ‘இப்படி போய்ட்டு இப்படி வந்துவிடலாம்’ என் ஆட்டோவிலேயே கூட்டிட்டுபோய் பின்னர் திரும்பவும் இங்கேயே கொண்டுவந்து இறக்கி விடுகிறேன் என்பாராம்.

மூதாட்டிகளும் சும்மாத்தானே இருக்கிறோம், நல்ல காரியம்தானே, ஆசிர்வாதம் செய்யபோகிறோம், அதற்கு தட்சணையாக பணம் வேட்டி, சேலை தருகிறார்கள், தம்பி யாரும் இல்லாததால் கூப்பிடுது, ஆட்டோவிலேயே கூட்டிட்டுப்போய் மறுபடியும் இங்கேயே திருப்பி கொண்டுவந்து விட்டுவிடுகிறேன் என்று சொல்லுது அப்புறம் என்ன என்று ஒப்புக்கொண்டு கிளம்பி சென்றுள்ளனர்.

அவர்களை ஆட்டோவில் அழைத்து செல்லும்போது பாட்டி சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது தங்க நகை அணிந்திருந்தால் சேட்டு வீட்டில் பணம் தரமாட்டார்கள் அதனால் அதைகழற்றி வைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறுவார்.

தம்பி நமக்காக எவ்வளவு மெனக்கிடுது என்று அவர்களும் நகைகளை கழற்றுவார்கள் அதை வாங்கி தான் பத்திரமாக வைத்துக்கொள்வதாகவும், திரும்ப வீட்டில் விடும்போது தருவதாகவும் கூறி ஆட்டோவின் டேஷ்போர்டில் வைத்துவிடுவார்.

பின்னர் ஏதாவது காரணம் சொல்லி அல்லது ஏதாவது விசேஷம் நடக்கும்வீட்டின் முன் இறக்கிவிட்டுவிட்டு  ஆட்டோவில் தப்பி சென்றுவிடுவாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கடந்த மூன்றுமாதமாக புகார் அளித்துள்ளனர்.

புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து அடையார் துணை ஆணையர் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் உதவி ஆணையர் லோகநாதன், செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

குற்றச்சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட இடங்களில் மூதாட்டிகளை ஆட்டோவில் ஏற்றுவது, இறக்கிவிட்டு தப்பிச் செல்லும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டிய நபர், ஆட்டோ பதிவெண் ஆகியவற்றை சேகரித்த போலீஸார்  அதனடிப்படையில் சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இதேப்போன்று கவனத்தை திசைத்திருப்பி திருடுவதில் வல்லவர் என்பதும், இதற்காக ஆட்டோ ஒன்றை வாங்கி ஆட்டோ ஓட்டுநர்போல் செயல்பட்டதும் தெரியவந்தது.

திருவல்லிக்கேனி, ஐசிஎப், சிந்தாதிரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு போன்ற பகுதிகளில் இதேப்போன்ற பாணியில் மூதாட்டிகளை ஏமாற்றி நகைப்பறித்ததன்பேரில் அந்தந்த காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.  

பின்னர் சுந்தரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 9 சவரன் தங்க நகை மற்றும் சுந்தர் பயன்படுத்திய திருட்டுக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

அவர்மீது ஐபிசி 341, 294b, 336, 392,397, 506(!!) ஆகிய பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x