

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இன்று
(வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.ராதாமணி (67). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரை படித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத்தலைவராக பதவி வகித்தார். நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று உடல்நிலை மோசமானதை அடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்தார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கல்லூரி கால நண்பர் என்பதும் குறிப்பிடதக்கது.