அரசு விரைவுப் பேருந்தில் மழைநீர் கசிவு: இருக்கையில் உட்கார முடியாமல் இரவு முழுவதும் பயணிகள் தவிப்பு

அரசு விரைவுப் பேருந்தில் மழைநீர் கசிவு: இருக்கையில் உட்கார முடியாமல் இரவு முழுவதும் பயணிகள் தவிப்பு
Updated on
2 min read

அரசு விரைவுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் இருக்கையில் உட்கார முடியாமல் பல மணி நேரமாக நின்றுகொண்டே பயணம் செய்து பயணிகள் அவதிப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தொலைதூரப் பகுதிகளுக்கு மொத்தம் 954 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின், மூலம் தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னையில் இருந்து மட்டுமே பல்வேறு இடங்களுக்கு 500 விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நீண்ட தூர பயணத்துக்கு அரசு விரைவு பஸ்களையே நம்பியுள்ளனர்.

ஆனால், அரசு விரைவு பஸ்கள் போதிய அளவில் பராமரிப்பு பணிகள் இல்லாமல் இயக்கப்படுவதால் நெடுஞ்சாலைகளில் திடீரென நிறுத்தப்படுகின்றன. இதுவே, மழைக்காலத்தில் பஸ்ஸின் உள்ளே மழை நீர் ஒழுகுவதால், பயணிகள் நிம்மதியாக உட்கார்ந்து பயணம் செய்ய முடியவில்லை. மழைக்காலம் நெருங்கவுள்ள நிலையில், விரைவு பஸ்களை பராமரித்து இயக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நின்றுகொண்டே பயணம்

இது தொடர்பாக மயிலாடுதுறை சேர்ந்த அ.அப்பர் சுந்தரம் கூறுகையில், ‘‘ஞாயிற்றுக்கிழமை (செப். 21) இரவு 11.30 மணிக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பஸ் (டி.என்.01 என்-8785) மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. 45-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தோம். கடலூர் அருகே வரும்போது, கனமழை பெய்தது, அப்போது பஸ்ஸில் மழைநீர் ஒழுகி இருக்கைகள் முழுவதும் நனைந்தன. இதனால் இருக்கைகளில் உட்கார முடியவில்லை.

இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் புகார் செய்தோம். அவர்கள் பாண்டிச்சேரி பணிமனைக்கு பஸ்ஸை கொண்டு சென்றனர். “வேறு பஸ் எதுவும் இல்லை. அதிகாலை 4 மணிக்குத்தான் வேறு பஸ் வரும்” என்று அந்த பணிமனையில் தெரிவித்தனர். சக பயணிகள் சென்னை விமான நிலையத்துக்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், எங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு அதே பஸ்ஸில் சென்னைக்கு வந்தோம். பல மணி நேரம் நின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.

சிஐடியு சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அரசு விரைவு பஸ்களுக்கு கரூரில்தான் பாடி கட்டப்படுகிறது. கர்நாடக போக்குவரத்துக் கழக பஸ்களுக்கும் அங்கேதான் பாடி கட்டப்படுகிறது. ஆனால், பஸ் பாடியின் தரம் வேறுபடுகிறது. நமக்கு வரும் புதிய பஸ்களில் கூட, மழை நீர் கசிந்து உள்ளே செல்வதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது ஆட்கள் பற்றாக்குறையால் பராமரிப்புப் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன. அதுபோல், உதிரி பாகங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது பழைய பஸ்கள் கழிக்கப்பட்டு படிப்படியாக புதிய பஸ்களை சேர்த்துக் கொண்டு வருகிறோம். இந்த புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற வழித்தடங்களிலும் ஆய்வு நடத்தி பஸ் பாடிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in