

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில்தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்றுகூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ரமலானை ஒட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள ரமலான் வாழ்த்துச் செய்தி
''ஈகை, ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமலான் திருநாளும், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் நோன்புகளும் இஸ்லாமியர்களின் வாழ்வில் இன்னுமொரு நிகழ்வு என்று கடந்து செல்லும் நிகழ்வுகள் அல்ல. இவைதான் இஸ்லாமிய மக்களை அவர்களின் வாழ்க்கை முறையில் புடம் போட்ட தங்கங்களாக மாற்றுகின்றன.
இஸ்லாமிய மக்கள் நோன்பு காலத்தில் அதிகாலையில் தொடங்கி சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கும் நேரத்தில் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். பிறரை அவமதித்தல், புறம்பேசுதல், சபித்தல், பொய் பேசுதல் போன்ற தவறுகளைக் கூட இஸ்லாமியர்கள் செய்வதில்லை. அதுமட்டுமின்றி, தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல், பிறருக்கு கேடு செய்யாமை போன்ற நல்ல செயல்களையும் இஸ்லாமியர்கள் செய்கின்றனர்.
நன்மைகளை மட்டுமே போதிக்கும் இஸ்லாம்
மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் மட்டும்தான் கடைபிடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை; மற்றவர்கள் கடைபிடிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளும் கிடையாது. அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் இந்த போதனைகள் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியவை.
உலகில் பிறந்த அனைவரும் நமது உறவுகள். அனைத்து துயரங்களும், மகிழ்ச்சிகளும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட நாம் உறுதியேற்றுக் கொள்வோம்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
*
கே.எஸ்.அழகிரி வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் அழகிரி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
''கடந்த ஒரு திங்களாக உணர்வு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும்இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி
''திருக்குர் ஆன் வழங்கப்பட்ட புனித மாதத்தில் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில்தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும்.
இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவதுதான் ரமலான் திருநாளாகும்.
தீமைகளை ஒழிக்க உறுதியேற்போம்
ரமலான் மாதத்தில் வழங்கப்பட்ட குரான் நூல் உன்னதமான போதனைகளைத்தான் உலகத்துக்கு வழங்குகிறது. அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக்கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.