

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி குழந்தையின் உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (30). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி நித்யாவை (25) புலியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித் திருந்தார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோதே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அன்றைய தினம் இரவே மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புலியகுளத்தில் உள்ள மருத்துவமனையின் தவறான செயல்பாடுகள் காரணமாகவே குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகக்கூறி, அந்த மருத்துவமனை முன்பு குழந்தையின் உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரங்கராஜனின் நண்பரான வழக்கறிஞர் கண்ணன் கூறும்போது, “செவிலியர்களே நேரடியாக குழந்தையின் தாய்க்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஒவ்வொரு முறை சிசிக்சை அளிக்கும்போதும் அதை வாட்ஸ்அப்பில் படம்பிடித்து டாக்டருக்கு அனுப்பி அதன்பின் அவர் பரிந்துரைக்கும் விஷயங்களை செவிலியர்கள் செய்து வந்துள்ளனர். குழந்தையின் இருதய துடிப்பு குறைந்த பிறகுதான் டாக்டர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இன்னும் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் அந்த மருத்துவமனையில் பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் நிலை மோசமடைய காரணமான மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ராமநாதபுரம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ராமநாதபுரம் காவல்நிலையத்தில் குழந்தையின் தாய் நித்யா அளித்த புகாருக்கு, புகார் மனு ஏற்புச் சான்றிதழை (சிஎஸ்ஆர்) போலீஸார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.