குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி அனைத்து தரப்பு மக்களுக்கான குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து மழை பொய்த்துவிட்ட காரணத்தால் பல மாவட்டங்களில் வறட்சியே தொடர்ந்து நீடித்து விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தேவையான தண்ணீர்  கிடைக்கவில்லை.

இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு சென்னை உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கொடுப்பதில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. காரணம் வறட்சியால் குளம், குட்டை, ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

இருப்பினும் தமிழக அரசு மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கான பல வழிகளை ஏற்படுத்திச் செயல்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு நெய்வேலி தண்ணீரை, ரயில் மூலமும், லாரிகள் மூலமும் கொண்டுசெல்லவும், குவாரிகளில் இருந்து தண்ணீர்  கொண்டுசெல்லவும், ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் தண்ணீர்  பெறவும் முழு முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். மேலும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீரைக் கொடுக்கலாம்.

பொதுவாகவே தண்ணீரின் தேவை அதிகரித்து வரும் வேளையில் தற்போதைய வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் போதுமான தண்ணீர்  கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நீண்ட காலத்திற்குப் பயன்படும் வகையில் வரைமுறை வகுத்து ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்தி, செயல்படுத்தி, தொடர்ந்தால் வரும் காலங்களில் தற்போதைய தண்ணீர்  பிரச்சினை குறையும்.

குறிப்பாக தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயப்படுத்தவும், நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரித்து, பாதுகாக்கவும் முறையான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் நிலவும் தண்ணீர்  பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளோடு மேலும் அத்துறையின் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து, தண்ணீர் தேவையான அளவிற்கு கிடைக்க வழிவகுக்க வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசு தண்ணீரின் அவசிய, அவசர தேவையைக் கவனத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு தமிழக மக்களின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in