Published : 14 Jun 2019 12:50 PM
Last Updated : 14 Jun 2019 12:50 PM

ரூ 6 ஆயிரம் வழங்கும் திட்டம்: தமிழக விவசாயிகளும் பயன்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், தமிழக விவசாயிகளும் பயன்பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியது. தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தால் நாடு முழுவதும் 3.03 கோடி விவசாயிகளுக்கு 2 ஆயிரம் வீதம் 2 தவணைகளில் மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு இத்திட்டத்தில் ஏற்கெனவே விவசாயிகளுக்கு இருந்த உச்ச வரம்பான 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் இருந்தால் 6 ஆயிரம் கிடைக்காது என்பதை நீக்கி நாட்டில் உள்ள 14.3 கோடி விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் வழங்க அரசாணையை மத்திய அரசு பிறப்பித்தது. இதனால் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவார்கள்.

நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு இத்திட்டத்தினால் 87 ஆயிரத்து 217 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சுமார் 75 சதவீத விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இத்திட்டத்தின்படி ஒரு விவசாயி ஆண்டுக்கு 6 ஆயிரம் பெற வேண்டுமென்றால் பட்டா அவரது பெயரில் இருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் உள்ள சுமார் 75 சதவீத விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் தொடர்பாக இன்னும் சிக்கல் நீடிக்கிறது. காரணம் வருவாய் மற்றும் பத்திரப் பதிவு துறையினர் முறையாக நடவடிக்கைகளில் ஈடுபடாத காரணத்தால் 1983 முதல் 2019 வரையிலான பட்டா மாறுதல் முறையாக நடைபெறவில்லை.

குறிப்பாக பட்டா பெயர் மாறுதல் செய்து தருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 வருடம் ஆகும். விவசாயிகள் மின் இனைப்பு பெற, விவசாய கடன் பெற, மானிய திட்டத்தின்படி உதவி பெற வேண்டுமென்றால் பட்டா அந்தந்த விவசாயி பெயரில் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் சுமார் 75 சதவீத விவசாயிகளுக்கு பட்டா கிடைக்கப்பெறாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு அவர்களின் பெயரில் பட்டா கிடைக்கப்பெறாமல் இருப்பதற்கு அலுவலர்கள் பற்றாக்குறையா, கணினியில் தவறாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா போன்ற காரணத்தை எல்லாம் கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.

மேலும் தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12,672 கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் பட்டா மாறுதல் முகாம் நடத்தி, விவசாயிகள் வாழும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு உரிய பட்டாவை வழங்கிட வேண்டும். அதன் மூலம் விவசாயிகளுக்கு பட்டா முறைப்படி கிடைத்துவிட்டால் மத்திய அரசின் ஆண்டுக்கு 6 ஆயிரம் கிடைக்கும் திட்டத்தினால் பயன் பெறுவார்கள்.

எனவே தமிழக அரசு - மத்திய அரசின் திட்டப்படி தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கிடைத்திட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும்", என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x