

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் திருமண நிதியுதவித் திட்டத்துக்கான பணம் அவரவர் வங்கிக் கணக்கிலேயே (ஆன்-லைன்) செலுத்தப்படுகிறது.
பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் இந்த வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தமிழக அரசு 5 விதமான திருமண நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்மாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
படிக்காத பெண்ணாக இருந்தால் ரூ.25 ஆயிரம் மட்டும் தரப்படுகிறது.
திருமண நிதியுதவி வழங்கப் படுவதில் இடைத்தரகர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆன்-லைனில் விண்ணப் பிக்கும் முறையை முதல்கட்டமாக சென்னை, அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவை ஆகிய 10 மாவட்டங்களில் தேசிய தகவலியல் மையம் (நிக்) மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.
பெரம்பலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதி முழுமை யாக ஏற்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 7 மாவட்டங்களில் இந்த வசதி ஏற்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமண நிதியுதவி கோரி ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை (ஆன்-லைன்) முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில், கடந்தாண்டு (2013-2014) திருமண நிதியுதவி கோரி விண்ணப்பித்த 4,240 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை 4,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக் கணக்கு விவரங்களுடன் வந்துள்ளன.
திருமண நிதியுதவி கோரி விண்ணப்பிக்க வரும்போதே வங்கிக் கணக்கு தொடங்கும்படி கூறுகிறோம். ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்தால் அது பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். கூட்டுக் கணக்காக இல்லாமல் தனிநபர் பெயரில் கணக்கு இருக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிக் கணக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதாவது ஒன்றில்தான் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அல்லது அந்த வங்கிகளில் ஏதாவது ஒன்றில் கணக்குத் தொடங்கிவிட்டு விண்ணப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.