

மெரினா பகுதியில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மெரினாவில் போராட்டங்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட கோரி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை தேர்வு செய்கின்றனர்.
துண்டறிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மெரினாவில் ஒன்றுகூடும்படி அழைப்பு விடுக்கப்படுக்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், சுற்றுலா வருபவர்களும் பாதிக்கப்படுவதால், 2018 செப்டம்பர் 3-ம் தேதி மெரினா பகுதியில் போராட்டம் நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் மெரினாவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என எவற்றிற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முழு முனைப்பில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மெரினா பகுதியில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், தற்போதும் மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோரியது தொடர்பாகவோ, நடத்தப்பட்டது தொடர்பாகவோ எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யாமல் வழக்கு தொடர்ந்ததற்காக ஹரிகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.