Published : 25 Jun 2019 12:37 PM
Last Updated : 25 Jun 2019 12:37 PM

நீக்கப்போகிறேன் என்பதை நேரில் சொல்லிவிட்டேன்; தங்க தமிழ்ச்செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்: டிடிவி தினகரன் பேட்டி

தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார். என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். அவரை நீக்குவதில் எனக்கு பயம் எதுவுமில்லை. நீக்கப்போகிறேன் என அவரிடமே சொல்லிவிட்டேன் என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தேனி மாவட்ட அமமுகவில் மாற்றுக் கருத்துகள் அதிக அளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு இடம்பெயரும் நிலையில், தங்கதமிழ்ச்செல்வனின் ரகசியக் கூட்டங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே தங்க தமிழ்ச்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ‘நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாரும் அழிந்துவிடுவீர்கள். இந்த மாதிரி அரசியல் செய்ய வேண்டாம் என்று உங்கள் அண்ணன் தினகரனிடம் போய் சொல். இந்த மாதிரி நடந்து கொண்டால் எப்போதும் நீங்கள் ஜெயிக்க மாட்டீர்கள்' என்று ஆவேசமாகப் பேசுவது தெரிகிறது. இது அமமுக கட்சிக் குழுவில் பகிரப்பட்டு பின்பு படிப்படியாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவியது.

இந்நிலையில்  இது தொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதாவது:

''பேட்டிகளைத் தவறாகக் கொடுத்தபோது தங்க தமிழ்ச்செல்வனை அழைத்துக் கேட்டேன். கேள்வியை தப்பாகக் கேட்டார்கள். நீங்கள் ஏன் பதில் அளிக்கிறீர்கள். தப்பான கேள்விக்கு ஏன் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன்.

இனிமேல் பதில் அளிப்பதாக இருந்தால் நிதானமாகச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்க நேரிடும் என எச்சரித்தேன்.

தொலைக்காட்சி செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டு நாங்கள் யாரையும் நீக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏப்ரல் மாதம் நாங்கள் பொதுச்செயலாளரையும் துணைத்தலைவரையும் தேர்வு செய்தோம். தலைவர் பதவியைக் காலியாக வைத்துள்ளோம். மற்ற நிர்வாகிகளை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்தோம்.

நிர்வாகிகள் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். முதன்முதலில் நியமனத்தை அறிவிப்போம், நீக்கத்தை அறிவிக்க வேண்டாம் என நினைத்திருந்தோம். எங்களுக்கு யாரையும் நீக்க வேண்டும் என்பதில் பயமில்லை.

கட்சி நிர்வாகிகள் என்னைத் தொடர்ச்சியாக வந்து சந்திக்கிறார்கள். அதுபோல் அவரையும் அழைத்துப் பேசியுள்ளேன். அவர் தொடர்ந்து தவறாக பேசும்போதே அவரை அழைத்து எச்சரித்தேன். நீங்கள் உங்கள் இஷ்டப்படி முடிவெடுங்கள் என்று தெரிவித்தேன். நீங்கள் சொல்வதுபோல் தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்.

என்னைச் சந்திக்க பல நிர்வாகிகள் வந்திருந்தனர். அடிக்கடி என்னைச் சந்திக்க வரமாட்டார்கள். நான் அவசரக் கூட்டம் எதுவும் போடவில்லை.

தங்க தமிழ்ச்செல்வன் முடிவெடுத்துவிட்டதால் அடுத்த நிர்வாகியைத் தேர்வு செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம். அன்றே நாங்கள் பேசி முடிவெடுத்தோம். அடுத்த கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மாற்றலாம் என முடிவெடுத்தோம். மற்றபடி எந்த பயமும் இல்லை''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தினகரன் பதில் அளித்தார்.

இனி விளக்கம் கேட்பீர்களா?

இனி என்ன விளக்கம்? நான் ஏற்கெனவே அழைத்துச் சொல்லிவிட்டேனே.

என் மேல் தவறு இருந்தால் சொல்லலாம், அல்லது நீக்குங்கள் என்று அவர் சொல்கிறாரே?

அதைத்தான் அவரை ஏற்கெனவே நீக்கப்போகிறேன் என்று அவரிடமே சொல்லிவிட்டேனே. அவர் யார் எனக்கு அறிவுரை சொல்ல. 

தலைமை கலந்து ஆலோசனை செய்யவேண்டும் தன்னிச்சையாகச் செயல்படுகிறது என்கிறாரே?

அதுபற்றி ஒன்றும் சொல்ல முடியாது. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அவரைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்கவேண்டாம். நீங்கள் நினைப்பதுபோல் அவர் விஸ்வரூபம் எடுக்கும் நபரல்ல.

அவர் கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர் அல்லவா?

அரசியலில் எல்லோரும் அப்படித்தான். அவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார். மற்றவர்கள் ஒரு முடிவெடுத்தால் இவர் ஒரு முடிவெடுப்பார். வாய்க்கு வந்ததைப் பேசுவார். நான் பலநாள் எச்சரித்துள்ளேன்.

சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் உங்கள் முடிவு என்ன?

எப்படி அவருக்கு ஆதரவாக இருக்க முடியும்? 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் எங்களுக்கு எதிராக நடந்தவர், அவரை எப்படி ஆதரிக்க முடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் சபாநாயகருக்கு எதிராகவும்தான் ஓட்டு போடுவோம்.

ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் நிலை என்ன?

அதை அன்று கூட்டம் நடக்கும்போது பாருங்கள்.

தங்க தமிழ்ச் செல்வன் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவாரா? அல்லது கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா?

இரண்டிலிருந்தும்தான் நீக்கப்படுவார். 20 ஆண்டுகள் என்னுடன் பழகியவர் என்கிற முறையில் கவுரவமாக கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து உங்களை நீக்குவேன் என்று சொன்னேன். அது அவருக்குப் புரிந்திருக்கும். சிலரின் தூண்டுதலின்படி தங்க தமிழ்ச்செல்வன் பேசுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

தேர்தல் வரட்டும். அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம்.

தேர்தல் வராமலே ஆட்சி மாற்றம் என்கிறாரே ஸ்டாலின்?

அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x