Published : 16 Sep 2014 06:17 PM
Last Updated : 16 Sep 2014 06:17 PM

உள்ளூர் பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்தியதால் இடைத்தேர்தல்களில் தோல்வி: பாஜக

மக்கள் உள்ளூர் பிரச்சினைகளைக் கொண்டு வாக்களித்ததால், இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, "நாங்கள் நிறைய இடங்களில் வென்றுள்ளோம், மற்ற இடங்களில் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புக்கிணங்க இல்லை என்பது உண்மைதான். மேலும் முழுப் பெரும்பான்மை உள்ள மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலத்திலும், மக்கள் உள்ளுர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வாக்களித்ததாலும் முடிவுகள் சாதகமாக அமையவில்லை” என்றார்.

அதேவேளையில், மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது என்ற அவர், "இந்தத் தேர்தல் முடிவுகளை தேசிய அல்லது மாநில அளவுகோல்களில் அறுதியிடுதல் கூடாது, உள்ளூர் பிரச்சினைகளைக் கொண்டு கட்சிகள் இதில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பதை மறக்கலாகாது" என்றார்.

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த மாதம் வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்தத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும். ஏனெனில் புதிய அரசு அமைவதற்கான தேர்தல்கள் அவை" என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதன்முதலாகத் தனியே நின்ற பாஜக பாசிர்ஹாத் தக்‌ஷின் தொகுதியை வென்றது பெரிய வெற்றியாக அந்தக் கட்சியில் பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க நிலவரம் பற்றி பாஜக மாநிலத் தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், "சவுரிங்கி தொகுதியிலும் பாஜக வென்றிருக்கும், ஆனால் அங்கு திரிணமூல் மதவாதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அந்தத் தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம். பாசிர்ஹாத் தொகுதியிலும் எங்கள் வெற்றியை நிறுத்த அவர்கள் முயன்றனர். ஆனால் தோல்வியடைந்தனர்” என்றார்.

சவுரிங்கி தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா பிரச்சாரம் செய்து தோல்வி ஏற்பட்டதே என்று கேட்டதற்கு பதில் அளித்த சின்ஹா, “ஒரு விஷயத்தைக் கருத்தில் கொள்வது அவசியம், சவுரிங்கியில் இதுவரை 10,000 வாக்குகளைக் கூட பெற்றதில்லை, ஆனால் இந்த முறை 2-ஆம் இடம் பிடித்துள்ளோம். மேலும் இரண்டு தொகுதிகளிலும் அமித் ஷா பிரச்சாரம் செய்தார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x