Published : 17 Jun 2019 09:09 PM
Last Updated : 17 Jun 2019 09:09 PM

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ வாதம்

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தனது தரப்பு வாதத்தை சிறப்பு நீதிமன்றத்தில் தானே வாதாடினார் வைகோ.

அவரது வாதம்:

“சென்னை அண்ணா சாலை, ராணி சீதை அரங்கில் நடைபெற்ற குற்றம் சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நான் பேசியதற்கான காணொலியோ, ஒலிப்பதிவு ஆவணங்களோ சுருக்கு எழுத்தாளர் பதிவுகளோ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தியப் பிரதமரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம் என்று பேசவில்லை. இலங்கையில் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், ஒவ்வொரு தமிழச்சியின் சாவுக்கும், ராஜபக்சேதான் பொறுப்பு. அவரை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம் என்று பேசினேன்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறைகள், நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினேன். இந்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய பேச்சின் நோக்கம் ஆகும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்ததால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்று சொன்னேன். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 தளபதிகள் சயனைடு அருந்தியதற்கும், 12 பேர் இறந்ததற்கும் அதுதான் காரணம் என்று சொன்னேன்.

விடுதலைப் புலிகளின் உயிர்த்தியாகத்தைப் பற்றிப் பேசினேன். இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ரேடார் உள்ளிட்ட ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமும் கொடுத்தது.

எனவே, நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை பலமுறை நேரில் சந்தித்து, இலங்கை அரசுக்கு உதவக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தேன். கடிதங்கள் எழுதினேன்.

அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா,  ஈரான், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளிடம் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்கிக் குவித்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தது. ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களித்தது என்று சொன்னேன். தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசுக்குப் புரிய வைப்பதற்காகப் பேசினேன்.

இந்திய ராணுவ வாகனங்கள் தமிழ்நாடு வழியாகச் சென்றபோது தடுத்து நிறுத்தியதற்காக சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் அவர் அனுப்பிய கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

2002 ஏப்ரல் 30-ம் நாள், இந்திய நாடாளுமன்றத்தில் பேசும்போது விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கின்றேன். நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்னேன்.

திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் பேசியதை மேற்கோள் காட்டிப் பேசினேன். அதற்காக என் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். அங்கிருந்து திரும்பி வரும்போது, சென்னை வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். 577 நாள்கள் சிறையில் இருந்தேன்.

அப்போது விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியது தவறு அல்ல என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். உச்ச நீதிமன்றம் என் கருத்தை ஏற்றுக்கொண்டது.

பொடா வழக்கு குறித்து மறு ஆய்வு செய்வதற்காக பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அந்தக் குழு, என்னுடைய பேச்சு பொடா சட்டப்படி குற்றப் பிரிவுகளின் கீழ் வராது என்று அறிக்கை தந்தது. அந்த அறிக்கையின்படி, என் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

2008 அக்டோபர் 21 அன்று,  I Accuse என்ற ஆங்கிலப் புத்தகத்தை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிட்டுப் பேசியதற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 13 (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் என் மீது மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில், என்னுடைய பேச்சின் காணொலி, ஒலிப்பதிவு ஆவணங்கள் தரப்பட்டன. சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முழுமையான விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில், நான் விடுதலை செய்யப்பட்டேன்.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசிய கருத்துகளைத்தான் ராணி சீதை அரங்கிலும் பேசி இருக்கின்றேன். அதற்காகத்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய பேச்சு, இந்திய அரசுக்கு எதிராக பகைமையையே வெறுப்பு உணர்வையோ தூண்டுகின்ற வகையில் அமைந்தது அல்ல.

என்னுடைய பேச்சால், எந்தவிதமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. பொது அமைதிக்குக் குந்தகம் எதுவும் ஏற்படவில்லை''.

இவ்வாறு வைகோ வாதாடினார்.

பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x