

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நாளைதான் முழுமையாகத் தொடங்கும், அதன்பின் 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவ மழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்கிவிடும். ஆனால், இந்த முறை தாமதமாக 6-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்த நிலையில் அதற்கு சாதகமாக சூழல் இல்லாததால் இன்னும் சில நாட்கள் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கேரளாவில் பல்வேறு இடங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால், தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
ஆனால், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இன்று தொடர்ந்து வெயில் இருந்துவருவதால், தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதா என்ற கேள்வியை தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் முன்வைத்தோம்.
அவர் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''தென்மேற்குப் பருவமழை உண்மையில் 9-ம் தேதிதான் கேரளாவில் முழுமையாகத் தொடங்கும். கேரளா, கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலை ஓரத்தில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2.5 மி.மீ. அளவு பெய்யும் மழையை வைத்து நாம் தென்மேற்குப் பருவமழை வந்துவிட்டதாகக் கூற முடியாது. அதற்கான முழுமையான காற்றுவேகம், மேற்கில் இருந்துவரும் காற்று போன்றவை இன்னும் வரவில்லை. கேரளாவில் பல இடங்களில் இன்று கூட வெயில் இருக்கிறது.
925 எச்பிஏ எனும் காற்று கேரளக் கடற்கரையில் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில்கூட இல்லை. தென்மேற்குப் பருவமழையின் போது அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையும் உருவாகும் நிலையில் இருக்கிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகிவிட்டால், தென்மேற்குப் பருவமழையை இன்னும் தூண்டிவிடும். இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையில் மழைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. அனைத்து விதமான சூழலையும் பார்க்கும்போது, நாளை (9-ம் தேதி)தான் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்.
தென்மேற்குப் பருவமழை நாளை தொடங்கினால், அடுத்த 5 நாட்களுக்கு கேரள மாநிலம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால், கடந்த ஆண்டைப் போல் வெள்ளம் வருமா என்று இப்போது கேட்க வேண்டாம்.
தென்மேற்குப் பருவமழையால் அடுத்துவரும் நாட்கள் கேரளாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கர்நாடக மலைப்பகுதிகள், கடலோரப்பகுதிகள், தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை இருக்கும். குறிப்பாக அணைப்பகுதிகளில் இருக்கும் இடங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
குமரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள், தேனி மாவட்டத்தில் கூடலூர், பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள், தேக்கடி, நீலகிரியில் அணைப்பகுதிகள், தேவாலா, அவலாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழையை அடுத்த 5 நாட்களுக்கு எதிர்பார்க்கலாம்.
கேரளாவில் நாளை தொடங்கும் தென்மேற்குப் பருவமழையால் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு கனமழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மலப்புரம், வயநாடு, கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும்.
தமிழகத்துக்கு நீர் வழங்கக்கூடிய கர்நாடகத்தின் கபிணி அணை, கேஆர்எஸ் அமைந்திருக்கும் பகுதிகளிலும் நல்ல மழையை நாளை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.