பிறை தெரிந்தது, புதன்கிழமை ரமலான் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு

பிறை தெரிந்தது, புதன்கிழமை ரமலான் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு
Updated on
1 min read

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை புதன் கிழமை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். பிறை தெரிந்ததால் நாளை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை ஆகும். குர்ஆனின் இறைவசனங்கள் வானிலிருந்து இறக்கப்பட்ட மாதம் எனும் சிறப்பு இந்த மாதத்துக்கு உண்டு.

ஐந்து கடமைகளில் ஒன்றான 30 நாட்கள் நோன்பிருத்தல், ஜகாத் எனும் தானம் கொடுத்தல் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் முக்கியமாக கடைபிடிப்பார்கள். பிறை தெரிந்தப்பின்னர் தொடங்கப்படும் நோன்பு 30 தினங்கள் அனுஷ்டிக்கப்படும். 30 நோன்புகளின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த மாதத்தில் ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் ஜகாத் எனும் தானம் வழங்குவார்கள்.

தனது வருமானத்தில் ஏழு சதவிதத்தை கணக்கிட்டு வழங்குவார்கள். அதுவும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்று. முப்பது நாட்கள் அல்லது பிறை கணக்குப்படி சில நாள் 29 நோன்புகள் முடிவில் ரமலான் கொண்டாடப்படும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் இது வேறுபடும். தமிழகத்தில் தலைமை காஜி அறிவிப்பை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் மெக்கா அமைந்துள்ள சவுதியின் நாட்கணக்குப்படி (அது ஒருநாள் முன்னர் வரும்) கொண்டாடுவார்கள்.

இன்று பிறை தெரிந்த காரணத்தால் நாளை ரமலான் பண்டிகை என தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் தெரிவித்துள்ளார். நாளை ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் அங்காங்கே சிறப்புத்தொழுகைகள் நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in