

படிக்காதவர்கள், பள்ளியில் இருந்து இடைநின்றவர்களுக்கு மனிதவள அமைச்சகம் மூலம் அடிப்படைக் கல்வி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு 5 பள்ளிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 10- ம் வகுப்பு என்பது அடிப்படைக் கல்வியாக உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றிற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஆனால் தொடக்க நிலையிலே பள்ளிப் படிப்பில் இருந்து விலகியவர்களுக்கு இந்த அடிப்படை கல்வித்தகுதி கிடைப்பதில்லை. இதனால் அரசு சார்பிலான பல்வேறு திட்டங்கள், பயிற்சிகள், வேலைவாய்ப்பினை இவர்கள் பெற முடியாத நிலை உள்ளது.
இதுபோன்ற நிலையை மாற்ற தற்போது மனித வள அமைச்சகம் மூலம் விடுபட்ட கல்வியை மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் என்ற அமைப்பு கற்றலில் குறைபாடுகள் உடைய குழந்தைகள், இடைநின்றவர்கள், இளம்வயதில் படிக்க இயலாதவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் படித்து தேர்ச்சி பெறலாம். பாடங்களுடன் தொழிற்கல்வியையும் பயிலலாம்.
மிகக் குறைவான கல்வி மற்றும் தேர்வுக் கட்டணம் பெறப்படுகிறது. முந்தைய கல்விமுறையில் பெற்ற இரண்டு பாடங்களின் மதிப்பெண் அல்லது ஐடிஐதேர்ச்சியில் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்ணை உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இக்கல்வித்திட்டம் பெற்றுள்ளது. இதுவரை அடிப்படைக் கல்வியைப் பெறாதவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. இத்திட்டத்தில் விருப்பமான 5 பாடங்களைத் தேர்ந்தெடுத்து தமிழ், ஆங்கில வழியில் பயிலலாம்.
கணக்கு, அறிவியல் ஆங்கிலம் போன்ற பாடங்கள் கடினமானதாக நினைக்கும் மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வேறு ஏதேனும் 5 பாடங்களை படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் பெறலாம்.
இக்கல்வித்திட்டத்தை மாவட்டத்திற்கு குறைந்தது 5 பள்ளிகளில் செயல்படுத்த சிறுபான்மையினர் நல இயக்ககம் முயற்சி செய்து வருகிறது.
விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களைwww.nios.ac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மண்டல இயக்குநர், தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம், லேடி வெலிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற முகவரியிலோ (044) 28442239 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.