

வலையப்பட்டி அங்கன்வாடி மையத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமையல் செய்பவர் மற்றும் உதவியாளரையும் இடமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை வலையபட்டி கிராம அங்கன்வாடி மையத்தில் சமையலராகவும், உதவியாளராகவும் நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரு பெண்களுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு பகுதிகளுக்கு இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து இரு ஊழியர்களை பணி மாற்றம் செய்தது குறித்து ஜூலை 17-க்குள் விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனித உரிமையை மீறி இருவரையும் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எனவும், நடவடிக்கை எடுத்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனவும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.