

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் தகுதி பெற்ற 81 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை யற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்நிலையில் நடப்பு கல்வியாண் டில் இலவச மாணவர் சேர்க்கைக் கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22 முதல் மே 18-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தகுதியற்ற 7 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து மீதமுள்ள 1.13 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு பரிசீலனை செய்யப்பட்டன. இதில் ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி மற்றும் எச்ஐவி பாதித்த பெற்றோர் களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் கடந்த மே 31-ம் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
அதேபோல், 25 சதவீத ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவாக விண்ணப்பங்கள் வந்த 3 ஆயிரம் பள்ளிகளில் தகுதியான எல்லோருக்கும் சேர்க்கை ஆணை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஜூன் 6) குலுக்கல் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த குலுக்கல் முறையில் 81 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குலுக்கலில் தேர்வான குழந்தைகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும். இலவச சேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்விதக் கட்ட ணமும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.