உள்ளாட்சித் தேர்தல்; சென்னையில் 5,720 வாக்குச்சாவடிகள்: ஜூன் 10 முதல் பட்டியலைக் காணலாம்

உள்ளாட்சித் தேர்தல்; சென்னையில் 5,720 வாக்குச்சாவடிகள்: ஜூன் 10 முதல் பட்டியலைக் காணலாம்
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சி சாதாரண உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஜூன் 10 திங்கட்கிழமை பொதுமக்கள் பார்வைக்கு மாநகராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் முனைப்புடன் நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வார்டு வாரியாக ஒதுக்கீடு வேண்டும் என கோரி வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் வார்டு வரையறை முடிந்து கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி நடந்து வருகிறது. இதனிடையே வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள் வரைவுப் பட்டியல் தயாராகி அந்தந்த மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,564 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 5,720 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வரும் 10-ம் தேதி அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையாளர் அலுவலகம், மண்டல அலுவலகங்களிலும், அனைத்து வார்டு அலுவலகங்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்”.

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in