Last Updated : 08 Jun, 2019 10:31 AM

 

Published : 08 Jun 2019 10:31 AM
Last Updated : 08 Jun 2019 10:31 AM

இந்தி மொழியை தாமாக முன்வந்து கற்றுக்கொள்ளும் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தி மொழியை தாமாக முன்வந்து கற்றுக்கொள்ளும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசியக் கல்விக்கொள்கையை வடிமைக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு சமீபத்தில் மத்திய அரசிடம்  வரைவு தேசிய கல்விக் கொள்கையை தாக்கல் செய்தது. 384 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அதில் இருந்த ஒரு அம்சம் பல்வேறு சர்ச்சையை தமிழகத்தில் கிளப்பியது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த வரைவு அறிக்கையில் தமிழகத்தில் இந்தி தணிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, வரைவு தேசிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயமில்லை, விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் 3-வது மொழியைத் தேர்வு செய்யலாம், இந்தி மொழி கட்டாயம் என்ற பிரிவு நீக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்நிலையில், இந்தி மொழியை தாமாக முன்வந்து கற்றுக்கொள்ளும் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தக்சின பாரத் இந்தி பிரசார் சபா ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

தக்சின பாரத் இந்தி பிரச்சார் சபா என்பது  கடந்த 1918-ம் ஆண்டில் மகாத்மா காந்தியால் தென் மாநிலங்களில் இந்தியைப் பரப்ப வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் விருப்பத்துடன் இந்தி கற்றுக்கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதாவது பரிட்சயா முதல் பிரவீண் தேர்வு வரை எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தட்சின பாரத் இந்தி பிரச்சார் சபாவின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜ் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியை தாமாக விருப்பத்துடன் கற்றுக்கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தி கற்றுக்கொள்பவரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் இந்தி தேர்வுகளை 5.80 லட்சம் பேர் எழுதினார்கள், ஆந்திரா, தெலங்கானாவில் 2.40 லட்சம் பேரும், கர்நாடகாவில் 60 ஆயிரம் பேரும், கேரளாவில் 21 ஆயிரம் பேரும் இந்தி தேர்வு எழுதியுள்ளார்கள்.

இந்தி மொழி குறித்து தமிழகத்தில் தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகியுள்ளன. ஆனால், உண்மையில் தேவையின் பொருட்டே மக்கள் ஆர்வத்துடன் இந்தி மொழியை கற்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு  இந்தி தேர்வுகளை 2.68 லட்சம் மக்கள் எழுதிய நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு 5.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 6 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

ஏறக்குறைய 100 ஆண்டுகளாக இந்தி மொழியைப் பயிற்றுவித்து வருகிறோம். புதிதாக ஒருமொழியைக் கற்றுக்கொள்ளும்போது உங்களின் அறிவு விசாலமாகும்.

எங்கள் அமைப்பின் சார்பில் பிரிட்சயா, பிராத்மிக், மத்தியமா, ராஷ்ட்ரபாஷா, பிரவேஷிகா, ராஷ்ட்ரபாஷா விஷாரத், ராஷ்டரபாஷா பிரவீன், நிஷாந்த் ஆகிய 8 தேர்வுகளை முடிக்க 4 ஆண்டுகள் தேவைப்படும். இதுதவிர இந்தியில் டிலிட், டாக்டர் பட்டம், எம்.ஏ., எம்.பில். படிப்புகளும் இருக்கின்றன" என ஜெயராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x