

24 மணி நேரத்தில் பயோ கேரி பேக்குக்கான லைசென்ஸ்கள் வழங்க ஆவன செய்யவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரசாணைக்கு ஏற்கனவே முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால், தயாரிக்கப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடை செய்து, அபராதம் விதிப்பு செய்திடவேண்டும் என பலமுறை வலியுறுத்தி வருகிறது. காரணம் தடை தமிழ்நாட்டில் மட்டும்தான்.
ஆனால், அண்டை மாநிலங்கள் அவற்றை தடை செய்யாத நிலையில், அங்கிருந்து அவை கடத்தப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக விற்பனை நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநியோகம் செய்யும் வணிகர்கள் அதுபற்றிய விவரம் தெரியாமல் வாங்கி விற்பனை செய்கிறார்கள். பயன்படுத்துவோரும் தங்களின் தேவை நிறைவேறினால் போதும் என்ற நோக்கில் அதனை பயன்படுத்துகிறார்கள்.
எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னர், விற்பனையாளர் மற்றும் பயனாளிகளை முறையாக எச்சரித்து, தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே அதிகாரிகள் கைப்பற்ற முனைய வேண்டுமே தவிர, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்கள் எந்தவகையிலும் அதிகாரிகள் முறைகேடாக கைப்பற்றக்கூடாது எனவும், அந்தப் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதையும் தடுத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துக்கொள்கிறது.
அவ்வாறு இல்லாத நிலையில், அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கும், முறையற்ற வழி முறைகளுக்கும் வித்திடும் என்பதை கவனத்தில் கொண்டு, தயாரிப்பு நிலையிலேயே சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு கொண்டு செல்பவர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும். பொதுநலனும், மக்களுக்கான விழிப்புணர்வும் பாதுகாக்கப்படும். தவறான அதிகாரிகளின் அத்துமீறல்களால் கடை சீல்வைப்பு, லஞ்சம், கையூட்டு போன்றவை பெறப்பட்டு வணிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற தவறான அதிகாரிகளின் கைகளில், சிறு-குறு வணிகர்களை பிடித்து தந்துவிடக்கூடாது என தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பயோ கேரி பேக் தயாரிப்பு நிலையைத் துரிதப்படுத்தவேண்டும். அவை தயாரிப்பதற்கான லைசென்ஸ்கள் பெறுவதற்கு மிகவும் சிரமப்படவேண்டிய நிலை உள்ளது. அதனால் 24 மணி நேரத்தில் பயோ கேரி பேக்குக்கான லைசென்ஸ்கள் வழங்கும் முறை கொண்டுவரப்படவேண்டும். பயோ கேரி பேக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உடனடியாகக் கிடைக்க துரிதப்படுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.