Published : 04 Jun 2019 10:44 AM
Last Updated : 04 Jun 2019 10:44 AM

ரமலான் திருநாள்: இஸ்லாமியர்களுக்கு வைகோ, வேல்முருகன் வாழ்த்து

 

ரமலான் திருநாளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

''இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள்.

 

வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், ஈதல் இசைபட வாழ்தல் என்பதையே வாழ்வின் ஊதியம் என்ற உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும். ஏழை, எளியோரின் துன்ப துயரம் நீங்க, அவர்களுக்கு ஈத்து உவக்கும் இன்பத்தை எல்லோரும் பெறுவோம் என்னும் நன்னெறி துலங்க வாழ்வோம்.

நபிகளின் வாழ்க்கை முன்மாதிரி

எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானால் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள் இந்த நாள்.

இந்த இனிய நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் வாழ்த்து

''நபிகள் பெருமானாரின் நெறிவழி நடக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் ஏனையோருக்கும் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்தினைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தொழுகை, தோழமை, தொண்டு என்கின்ற அறச்செயல்களால் சமத்துவம், சகோதரத்துவம் பேணும் வாழ்க்கைமுறையை வாழ்ந்து காட்டியவர் நபிகள். இறைவன் அருளிய இஸ்லாமாக அதனை நமக்கும் அருளினார் பெருமானார். அவ்வாழ்க்கை நெறியோடு இணைந்த ஒன்றுதான் ரமலான் நோன்பு என்பது!

 ரமலான்  நோன்பின் நோக்கம்

இந்த ரமலான் மாத நோன்பின் நோக்கம், பசி, தாகம் போக்க வழியின்றி நாளும் வாடும் ஏழை எளியவர் படும் பாட்டை நினைவுகூர்தலல்ல; அதனை உணர்தலே! உள்வாங்கிக்கொள்தலே! அப்படியென்றால் செய்ய வேண்டியது, அந்த ஏழை எளியவர்க்கு உதவுதலே! அப்படி உதவி செய்தல் வாழ்க்கை நெறியாக மனிதனுக்கு இஸ்லாம் இட்ட கட்டளையே!

இந்த உன்னதத்தை உள்ளடக்கமாகக் கொண்ட, இந்த மேன்மையை மார்க்கக் கடமையாகக் கொண்ட ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், இயலாதோரைக் கைதூக்கிவிடுவோம் என்றே உறுதியேற்போம்!''

இவ்வாறு வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x