Published : 05 Jun 2019 05:34 PM
Last Updated : 05 Jun 2019 05:34 PM

காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகள் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல: கர்நாடக அமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி காட்டமான பதில்

காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தியுள்ளது போல் தமிழகத்துக்கு உடனடியாக 9.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாதத்திற்குள் 9.2 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் கர்நாடக அணையில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறார். இது ஒரு தவறான கருத்து. ஏனென்றால் மாநில, மத்திய அதிகாரியை கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அணையில் தண்ணீர் இல்லை என்றால் 9.2 டிஎம்சி ஜூன் மாதத்துக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்க மாட்டார்கள்.

தண்ணீர் இல்லாதபோது தண்ணிர் கொடுக்கச் சொல்வதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரிகள் சிறு குழந்தைகள் அல்ல அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்றால் காவிரியில் தண்ணீர் இருக்கின்றது என்று பொருள்.

எனவே கர்நாடக அரசு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே உள்ள மக்கள், விவசாயிகளிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தாமல் அரசியல் காரணங்களுக்காக தவறான பாதையை தேர்ந்தெடுக்காமல் உடனடியாக காவிரி நீரை முறைப் பிரகாரம் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

சதானந்தா கவுடாவுக்கு கண்டனம்:

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவை வண்மையாகக் கண்டிப்பதாக அழகிரி கூறினார். இது தொடர்பாக, "மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அரசியல் சட்டத்திற்கு புறம்பான கருத்தை கூறியிருக்கிறார். மாநில அரசாங்கத்தினுடைய ஒப்புதல் இல்லாமல் வரைவு அறிக்கையை மத்திய அரசு தயார் செய்தது தவறு. அதுவே ஒரு சட்ட மீறல் அதற்காக தமிழக அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.

உச்ச நீதிமன்றமும் அணை கட்டுவதற்கான திட்ட வரைவை ஏற்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளது. அப்படியிருந்தும்கூட மத்திய அமைச்சர் மாநில அரசு வரைவு அறிக்கை அனுப்பினால் மேகதாது அணை கட்ட ஏற்பாடு செய்வேன் எனக் கூறியிருக்கிறார்.

இது தவறான முன்மாதிரியை ஒரு மத்திய அமைச்சர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது தவறு. தமிழக விவசாயிகளின் சார்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சதானந்த கவுடா வாக்குமூலத்தை கடுமையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x