

ஆட்சியர் வந்ததை அடுத்து குன்னூர் பேருந்து நிலையத்தில் மனநலம் குன்றியவர் தூங்கிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று (புதன்கிழமை) முழு சுகாதாரப் பணி நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்றதுமே, பேருந்து நிலையத்தை அவசரகதியில் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் வந்ததும், சுத்தப்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் மனநலம் குன்றிய ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் திவ்யா, வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர், ''ஆற்றில் குப்பை கொட்டக் கூடாது. ஆற்றோரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். குப்பை கொட்டுவதைக் கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்படும். தவறு செய்தால் கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைக்கப்படும். நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. இதை நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்றார்.
மேலும், அனைத்துக் கடைகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், தன்னிடம் இருந்த மாதிரி குப்பைத் தொட்டியைக் காண்பித்து, இதுபோன்ற குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துமாறு கூறினார்.
இதனால், கோபமடைந்த ஆட்சியர், ''நான் உங்களுக்கு விளம்பரம் செய்ய வரவில்லை. கடைக்காரர்கள் குப்பைத் தொட்டிகளை விருப்பம் போல் வைத்துக்கொள்ளட்டும்'' என கூறிச் சென்றார்.