

கோவையில் இன்று இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுடன், கோவையை சேர்ந்த முகமது அசாருதீன்(32), அக்ரம் ஜிந்தா, ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம்உசேன், இப்ராகிம் என்ற ஷாகின்ஷா ஆகியோருக்கு முகநூல் மூலம் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின்பேரில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று 6 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க், 1 இன்டர்நெட் டாங்கில், 13 சிடி, டிவிடிக்கள், 300 ஏர்கன் தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரேஸ்கோர்ஸில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இறுதியில், முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் இரவில் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு இன்று வந்து ஆஜராகும்படி சம்மன் அளித்து, அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை முதல், மீண்டும் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடையை சேர்ந்த ஷபியுல்லா, அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
வருவாய் துறை முன்னிலையில் கோவை மாநகர போலீஸார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.