

டிபன் பாக்ஸிற்குள் ரூ.1000 வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற திமுகவினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தேனாம்பேட்டை பச்சையம்மாள் சாலையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் ஏராளமான டிபன் பாக்ஸ்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குள் ரூ.1000 பணம் வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க முயற்சி நடப்பதாகவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான தாசில்தார் செல்வராஜுக்கு தகவல் கிடைத்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய உதவி ஆணையர் சிவபாஸ்கர் தலைமையிலான காவலர்கள் புதன்கிழமை இரவு அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 60 டிபன் பாக்ஸ்களில் ரூ.1000 பணம் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த டிபன் பாக்ஸ்கள் அனைத்தும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 117 சோப்பு கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “திமுக பிரமுகர் துளசி மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வெங்கடரத்தினம், சரவணக்குமார், மஞ்சுளா ஆகியோர் வசித்து வருகின்றனர். அங்கு சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த வீட்டில்தான் டிபன் பாக்ஸுக்குள் பணம் வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வெங்கடரத்தினம், சரவணக்குமார், மஞ்சுளா ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.