தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கை: அரசு கல்வி உதவித்தொகை குறைப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கை: அரசு கல்வி உதவித்தொகை குறைப்பு
Updated on
2 min read

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை பாதியாக அரசு குறைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில்  ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ் ஆண்டுதோறும்  சுமார் ஒரு லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி பயில்கின்றனர்.

இவர்களுக்கான படிப்புச் செலவு உள்ளிட்ட தொகையை அரசு நிர்ணயித்து வழங்கி வருகிறது. ஏற்கெனவே அரசு அறிவித்து வழங்கும் கல்வி உதவித்தொகை தற்போதுள்ள காலகட்டத்தில் போதவில்லை என விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகை எவ்வாறு வழங்கப்படுகிறது என்றால், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு செலவிடும் தொகை ஆகியவற்றில் எந்தத் தொகை குறைவோ, அந்தத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் திடீரென தமிழக அரசு, ஏழை மாணவர்கள் கல்வி பயில வழங்கப்படும் கட்டணத்தை பாதியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் நிர்ணயம் செய்திருந்த தொகையை பாதியாகக் குறைத்து தற்போதைய முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

முன்பு வழங்கப்பட்ட உதவித்தொகை தற்போது குறைக்கப்பட்ட தொகை வருமாறு:

பழைய கட்டணம்

தற்போது குறைக்கப்பட்ட

கட்டணம்

ரூ 25,385

ரூ 11,719

ரூ 25,414

ரூ 11,748

ரூ 25,613

ரூ 11,944

ரூ 25,655

ரூ 11,928

ரூ 25,622

ரூ 11,928


தற்போதைய கல்விச் செலவு, பள்ளிகள் கட்டணம் உள்ளிட்ட அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை அதிகரித்து வழங்குவதற்குப் பதிலாக உள்ளதையே பாதியாகக் குறைத்து வழங்கிட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருப்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது மாணவர்களை கடுமையாக பாதிக்கச் செய்யும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.மேலும், பல முன்னணி தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணக் குறைப்பால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்காக, பெற்றோரிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதற்கான வாய்ப்பை இந்த நடவடிக்கை உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in