

ஆளுநர் ரோசய்யாவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தனது கட்சி எம்எல்ஏக்களுடன் நேற்று காலை 11.05 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார். அப்போது, மனு ஒன்றை யும் ஆளுநரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பு, சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
பின்னர் வெளியே வந்த விஜயகாந்த், அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. ஆங்காங்கே வன்முறைகள் நடப்பதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினோம். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், கட்சி அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
பல இடங்களில் ஏற்பட்டுள்ள மின் தடை, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு அமைத்துள்ளது. அரசு கேபிள் டி.வி.யில் செய்தி சேனல்களின் ஒளிபரப்பு ஆளும்கட்சியினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.