

முதல்வர் ஜெயலலிதா கோடநாடு செல்வது புதிதல்ல; இதில் அதிருப்தி அடைய ஒன்றுமில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 2 மாதங்களாக தமிழகத் தில் தீவிரமாக பிரச்சாரம் மேற் கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் புறப்பட்டு சென்றார். அங்கு சுமார் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு, தமிழகம் திரும்பவுள்ளார்.
அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், சென்னையிலிருந்து விமானத்தில் ஹாங்காங் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளை சேர்த்திருக்கிறார்களே?
அதை நீங்கள் நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்.
தேர்தல் அமைதியாக நடந்ததாக போலீஸ் டி.ஜி.பி.க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாரே?
தேர்தல் அமைதியாக நடந்ததா என்பதை நாட்டு மக்கள்தான் சொல்ல வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா கோட நாடு பயணம் செல்கிறாரே?
இது வழக்கமான ஒன்றுதான். புதிதல்ல. இதில் அதிருப்தி அடைவதற்கு ஒன்றுமில்லை.