

மோட்டார் சைக்கிளை திருடி மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5 இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்
நேற்று (23.6.2019) ஞாயிற்றுக்கிழமை காலையில், ஐஸ் அவுஸ், இராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 5 இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமானது, செயின் பறிப்பு நடத்திய நாளன்று மயிலாப்பூர் பகுதியில் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த இருசக்கர வாகனத்தை ஓட்டும் நபர் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்து வரும் நபர், மேற்படி இடங்களில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடபட்டுள்ளது, சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் மயில்வாகணன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் சரக உதவி ஆணையாளர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைத்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.