

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதை நாங்கள் படுகொலை என்றே கூறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் சராசரியை விட குறைவான அளவிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு தவிடுபொடியாக்குகிறது. ஆயுஷ் கல்விக்குக்கூட நீட் தேர்வு நடத்தும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனால், தமிழக மாணவர்கள் நலனில் எல்லாம் அக்கறை இல்லாமல் அதிமுக அரசு மோடியின் கட்சியுடன் தேர்தல் உறவு கொள்கிறது. மோடி தலைமையில்தான் நாடு முன்னேறும் என்கிறது அதிமுக. அதனால்தான் மோடி அரசாங்கம் அடம்பிடித்து நீட் தேர்வை நடத்துக்கிறது.
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதை நாங்கள் படுகொலை என்றே கூறுவோம். இதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு.
இத்தகைய சூழலில் நாங்கள் அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்வது, நீட்ட்டுக்கு எதிராக வலிமைமிக்க போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என்பதுதான்.
மாணவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைக்கிறோம். தேர்வு தோல்விக்காக துயரமான முடிவை எடுப்பதை மாணவர்கள் கைவிட வேண்டும். மாறாக, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக உறுதியான போராட்டம் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு இடஒதுக்கீட்டில் 4600 இடங்கள் சென்றுவிடுகின்றன. புதிதாக அமல்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் பின் தங்கிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு கிடைத்துவிடுகிறது.
ஆணால், பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு பொருந்தாது என்கிறார்கள். கடந்த ஆண்டும் இதேதான் நடந்தது. இந்த ஆண்டும் இதையே சொல்கின்றனர். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்யும் அநீதி. எனவே, மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.