

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால், பள்ளி மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சீருடைகளை வழங்கமுடியவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த காராப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ''பள்ளிக் கல்வித்துறை பல்வேறு துறைகளைச் சார்ந்திருப்பதால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சீருடை வழங்கப்படும்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால், பள்ளி மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சீருடைகளை வழங்கமுடியவில்லை. நடத்தை விதிகள் முடிவடைந்ததும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் உரிய நேரத்தில் சீருடை வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு சீருடைகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்'' என்றார் செங்கோட்டையன்.