தனது மகன் குறித்து அவதூறு: அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் ஆணையரிடம் புகார்

தனது மகன் குறித்து அவதூறு: அமைச்சர் சி.வி.சண்முகம் காவல் ஆணையரிடம் புகார்
Updated on
1 min read

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நபரின் காணொலியை வெளியிட்டு தனது மகன் என சமூக வலைதளங்களில்  அவதூறு பரப்புகிறவர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி அமைச்சர் சிவி சண்முகம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்

சமீப காலமாக குற்றச்சம்பவங்கள் குறித்த காணொலி காட்சிகள் வலைதளங்களில், வாட்ஸ் அப்களில் வெளியாகிறது. அதை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தனக்கு ஆகாதவர்களை அவர்களுடன் கோர்த்து செய்தியை பரப்புகின்றனர்.

இதனால் சம்பந்தப்படாத அப்பாவியும், அவரைச்சார்ந்தவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதன்மீது சைபர் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும் அதுகுறித்து கவலைப்படாமல் பரப்பு வேலையை செய்கின்றனர்.

சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பழம் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவர் முழு போதையில் சொகுசுகாரை ஓட்டிவந்து ஆட்டோ ஒன்றின்மீது மோதினார், அப்படியும் நிற்காமல் வேகமாக ஓட்டிச் சென்று கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின்மீது மோதினார்.

இதில் அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் காயமில்லை, ஓட்டிவந்த தொழிலதிபர் நவீன்(30) மதுபோதையில் காவலர்களை தாக்கி தரக்குறைவாக திட்டினார். பின்னர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலைமுதல் இந்த காணொலியில் இருக்கும் நபர் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் என கூறி சமூகவலைதளத்தில் சிலர் செய்தியை பரப்பினர். அதை உண்மை என நம்பி பலரும் பரப்பினர்.

கைது செய்யப்பட்ட நவீனுக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் இதை உண்மை என நம்பி மற்றவர்களுக்கு ஷேர் செய்ததால் வைரலாகியது. இது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கவனத்துக்கும் சென்றது.

இதனை அடுத்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை இன்று காலை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

அவரது புகார் மனுவில் சமூகவலைதளத்தில் அவரது மகனைப்பற்றி பரவும் வதந்தி செய்திகளை குறிப்பிட்டு , இதுபோன்று அவதூறு பரப்புபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in