

தமிழகத்தில் மழை பெய்தவுடன் தண்ணீர்த் தேவை சீரடையும் என்றும் மக்களுக்குத் தேவையானவற்றை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி கூறியதாவது:
''தமிழகத்தில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. கேரளாவில் மழை தொடங்கி, கோயம்புத்தூரிலும் இந்த நேரத்தில் மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் பெய்யவில்லை.
இப்போதுகூட மழை வருவதுபோல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கோவை சுற்றுவட்டாரத்தில்கூட அண்மையில் மழை பெய்தது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மழை பொழியும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு எங்கெங்கு என்னென்ன தேவையோ, அதை உடனடியாகச் செய்துகொண்டு இருக்கிறோம்.
தமிழகத்தில் மழை நன்றாகப் பெய்தவுடன் தண்ணீர்த் தேவை குறைந்து சீரடையும்''.
இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் வேலுமணி.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்து சென்ற பின் வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையாக இருந்தது. இதோடு கத்திரி வெயிலும் சேர்ந்து கொண்டதால், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இதனால், மக்கள் பல்வேறு சிரமத்துக்கும் ஆளாகினர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் போதுமான அளவு பெய்யாமல் இருந்ததாலும், கடும் வெயிலாலும் தமிழகம் முழுவதும் நீராதாரங்கள் வறண்டன. பல்வேறு இடங்களிலும் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது. பல இடங்களில் உள்ள ஏரிகளும் கிணறுகளும் நீர் இன்றி வறண்டது குறிப்பிடத்தக்கது.