Published : 15 Jun 2019 11:02 AM
Last Updated : 15 Jun 2019 11:02 AM

சேதி உண்மை; மளிகைக் கடைக்காரரால் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன் இணையத்தில் பதிவு

தான் மளிகைக் கடைக்காரரால் தாக்கப்பட்ட சம்பவம் உண்மையே என எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புளித்த மாவை விற்பனை செய்த மளிகைக் கடைக்காரரைத் தட்டிக் கேட்டதற்காக எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கடைக்காரரால் தாக்கப்பட்ட ஜெயமோகன் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைதானார்.

நடந்தது என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் எனும் பகுதியில் மனைவி, மகளுடன் வசித்துவருகிறார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் இட்லி மாவு வாங்கிச் சென்றுள்ளார்.

வீட்டில் சென்று மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது அது மிகவும் புளித்துப்போய் இருந்துள்ளது. இதையடுத்து, தோசை மாவை அதே கடையில் கொண்டு கொடுத்துள்ளார்.

அப்போது தோசை மாவு விற்பனை செய்த பெண்ணின் கணவர் செல்வம், ஜெயமோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  வாக்குவாதம் முற்றி அவரைத் தாக்கியுள்ளார். பின்னர் ஜெயமோகன் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனால், கடைக்காரர் செல்வம் தொடர்ந்து வீட்டுக்குச் சென்று வாசலில் நின்று ஜெயமோகனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்

தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

ஜெயமோகன் அளித்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தை கைது செய்துள்ளனர். 

சேதி உண்மைதான்..

இந்நிலையில், ஜெயமோகன் தனது இணையதளத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, "சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன் . இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்துவிட்டார்கள்.

கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திருப்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார்.  நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவர் கணவர் நின்றிருந்தார். ஏற்கெனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறார் .

என்னைத் தாக்க ஆரம்பித்தார். தாடையில் அடித்தார். கீழே விழுந்தபோது உதைத்தார். என் கண்ணாடி உடைந்தது.. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னார்.  பின்னர் வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினார். வீட்டுக்குள் நுழைய முயன்றார். 

அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்றபின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x