Published : 08 Jun 2019 01:01 PM
Last Updated : 08 Jun 2019 01:01 PM

மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ரவீந்திரநாத் குமார் பதிலடி

மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வெற்றி பெற்ற பிறகு, மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர், தமிழக - கேரள எல்லைப் பகுதியான லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்திற்கு சென்றார். அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரமாக திகழும் முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னி குயிக்குக்கு மரியாதை செலுத்த வந்ததாக அவர் விளக்கமளித்தார்.

அதேபோன்று, ஆண்டிப்பட்டிக்கு வந்த அவர், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, அவர் எம்.பி.யாக பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்கக்கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வழக்குத் தொடரப் போவதாக கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனியில் வேட்பாளராக நின்றவர். அவருக்கு மக்கள் என்ன தீர்ப்பளித்திருக்கிறார்கள்? மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். நான் வெற்றி பெற்றிருக்கிறேன். மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்", என ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x