உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது. நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் காலியாக இருக்கும் தூத்துக்குடி, கோவை மாநகராட்சி மேயர் பதவிகள், 7 நகராட்சி தலைவர் பதவிகள் உள்ளிட்ட நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை (18-ம் தேதி) இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதை திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, பாமக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணித்துள்ளதால், களத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. சில இடங்களில் மட்டும் இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, நெல்லை மேயர், 4 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது, மீதமுள்ள இடங்களில் 1486 பேர் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா கோவையில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார். அதேநேரத்தில், பிரச் சாரத்துக்கான இறுதி நாளான நேற்று, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டனர்,

இதுபோல், ராமநாதபுரம் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், குமரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இடதுசாரிகளைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் ஒரே இடமான கோவை மாநகராட்சியில் (மேயர் பதவி) அக்கட்சியின் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் ஒரு வார்டுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களுக்கான இடைத் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22 ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சின்னங்கள் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்று மதியம், வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்படும். சென்னை உள்ளிட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்தது போல் வன்முறைகள் நிகழாமல் இருக்க உயர்நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. அதை அவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in