

தண்ணீர் பிரச்சினையை ஸ்டாலின் அரசியல் ஆக்குகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் நீர் சேமிப்பு தொடர்பான குறும்படம் இன்று வெளியிடப்பட்டது. மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் கடம்பூர் ராஜு. அப்போது, ''நீர் நிலைகளைத் தூர்வார குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளோம். அதைக்கூட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குகிறார். 15 தினங்களில் பருவமழை வரும் காலத்துக்குள் எப்படித் தூர்வார முடியும் என்று கேட்கிறார். அவர் ஆலோசனை வழங்கவில்லை.
எதையெடுத்தாலும் குற்றம் சொல்வதிலேதான் குறியாக இருக்கிறார். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றோ, மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை.
அதிமுகவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதே நேரத்தில் திரைப்படத் தொழிலுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தமிழக அரசு தலையிட்டு, அதைத் தீர்த்துவைக்கும்'' என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.