Published : 10 Jun 2019 00:00 am

Updated : : 10 Jun 2019 12:07 pm

 

மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால் முடங்கிக் கிடக்கும் வளர்ச்சித் திட்டங்கள்: விரைந்து முடிக்க முயற்சி செய்வாரா எம்.பி திருநாவுக்கரசர்?

மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள் ளாததால் தேக்க நிலையில் இருக்கும் திருச்சிக்கான வளர்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க புதிய எம்.பி. திருநாவுக்கரசர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மாநிலத்தின் மையப்பகுதியிலுள்ள திருச்சிக்கு மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு திட்டங்கள் அறிவிக் கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை செயல்பாட்டுக்கு வருவதில்லை.

மாநில அரசால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கள்ளிக்குடி மொத்த காய்கறி வணிக வளாகம், சென்டோசா பார்க், ஸ்ரீரங்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், சிறுகனூர் வன உயிரியல் பூங்கா, பஞ்சப்பூரில் வர்த்தக மையம், மணப்பாறையில் 1,000 ஏக்கரில் சிப்காட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதுபோலவே மத்திய அரசு தொடர்புடைய பல திட்டங்களும் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஓடுதள விரிவாக்கப் பணிதமிழ்நாட்டின் 2-வது பெரிய சர்வதேச விமானநிலையமாக திருச்சி விளங்குவதால், இங்கு பெரிய ரக விமானங்களை இயக்கும் வகையில் ஓடுதளத்தை 8,136 அடியிலிருந்து 12,000 அடியாக உயர்த்த முடிவு செய்து, அதற்கான பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கின.

ஆனாலும் இன்னும் முழுமைபெறாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல ‘பாசா' ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாமல் உள்ளதால், இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது.

திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர் ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் 43 கி.மீ தொலைவுக்கு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கின. 13 ஆண்டுகளாகியும் சுற்றுச்சாலைப் பணிகள் நிறைவுபெற வில்லை.

மன்னார்புரம் பாலம்ஜங்ஷன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பிரம்மாண்ட மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2014–ம் ஆண்டு தொடங்கின. 85 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில், 0.268 ஹெக்டேர் ராணுவ நிலத்தை பெறுவதில் உள்ள தடங்கல் காரணமாக சென்னை வழித்தடத்தை இணைக்கும் சாலையை அமைக்க முடியவில்லை. இப்பணிக்குத் தேவையான ராணுவ நிலத்தைத் தர தயாராக இருப்பதாக முன்பு ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்த நிலையிலும், இதுவரை அந்த நிலம் ஒப்படைக்கப்படாததால் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து திருச்சியில் இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி(ஐஐஐடி) கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தின. தற்காலிகமாக என்.ஐ.டி வளாகத்தில் செயல்பட்டு வரும் இக்கல்வி நிறுவனத்துக்கு சேதுராப்பட்டியில் நிரந்தர வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மாநில அரசிடம் நிலத்தைப் பெற்று, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், அதற்கான பணிகளும் இதுவரை முன்னெடுக்கப்படாமலேயே உள்ளன.

மறந்துபோன வாக்குறுதிகள்இதுதவிர திருச்சியில் ஜவுளிப் பூங்கா, திருச்சிக்கென ஒருங்கிணைந்த மெட்ரோ போக்குவரத்து ஆணையம், பால்பண்ணை சர்வீஸ் சாலை, பொன்மலை ஜி கார்னர் சுரங்கப்பாதை, பிற நகரங்களுக்கு உள்நாட்டு விமானசேவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் சேவை என மத்திய அமைச்சர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஏராளமான திட்டங்களும் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தமிழ்நாட்டின் தலைநகராக திருச்சியை மாற்ற முயற்சி செய்தவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவரது அரசியல் வழி வந்ததாகக்கூறி வாக்கு சேகரித்து, வெற்றி பெற்றுள்ள தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆரால் மிகவும் விரும்பிய திருச்சி மாநகரத்துக்கான திட்டங்களை மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

You May Like

m1

More From This Category

More From this Author