Published : 10 Jun 2019 02:00 PM
Last Updated : 10 Jun 2019 02:00 PM

வேகமாக, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும்  வாகனம் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் மதுபோதையில் வேகமாக காரோட்டி வந்த நபர், சாலையில் இருந்த தடுப்புகள் மீது மோதி பின்னர் மற்ற வாகன ஓட்டிகள் மீது மோதியதால் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று காலை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன், இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டினார்.

அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதுபோல் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்று மரணத்தை ஏற்படுத்தும்  குற்றத்திற்கான தண்டனையை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,  இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x