விஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு: பொது நன்மைக்காக சுய பலி கொடுத்த தமிழ் சமூகங்கள்

விஜய நகர பேரரசு கால செப்பேடு கண்டுபிடிப்பு: பொது நன்மைக்காக சுய பலி கொடுத்த தமிழ் சமூகங்கள்
Updated on
2 min read

வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களான தூரன் வேலுச்சாமி, நாகராசு கணேசுகுமார், பொன்னுச்சாமி, சதாசிவம், ரவிக்குமார் உள்ளிட்டோர் திருப்பூரில் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை நடத்தி வருகின்றனர். அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் ஐந்து தலைமுறைகளாக செப்பேடு ஒன்றை பாதுகாத்து வருவதாக இவர்களுக்கு தகவல் தெரிந்தது. அந்த செப்பேட்டை ஆய்வு செய்தபோது அது, விஜய நகர பேரரசர் ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ரவிக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அந்த செப்பேடு 1533-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 21-ம் நாளில் கொடுக்கப் பட்டது. அந்த காலகட்டத்தில் விஜய நகர பேரரசில் ராமராயர் என்கிற மன்னரின் கீழ் குறுநில மன்னராக சதாசிவராயர் ஆட்சி செய்தார். அப்போது தமிழகத்தில் தாராபுரம் பகுதியின் அதிகாரியாக இருந்தவர் திம்மராசய்யன். இவர் தாராபுரத்தில் வெண்கலப் பொருட்களுக்கு சுங்கம் செலுத்த வேண்டும் என்று உத்தர விடுகிறார். ஆனால், வெண்கலம் வியாபாரம் செய்யும் கன்னார் சமூகத்தினர் தங்களுக்கு எப்போதுமே சுங்கம் இல்லை என்று கூறி அதற்கு காரணமாக , புராண காலத்து கதையை அதிகாரியிடம் விளக்குகின்றனர்.

அதாவது, துவாபார யுகத்தில் பரதன் ஆட்சி செய்தபோது கன்னார்களின் மூதாதையர்களான உதிரசேனன், பதிரசேனன், நெதிரசேனன் ஆகியோர் வையாபுரியில் (பழனி) வெண்கலம் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அங்கு ஆட்சி செய்த தரணியரசன் சுங்கம் செலுத்த மறுத்த மூவரையும் யானையின் கால்களில் மிதிபட செய்கிறான். அப்போது காமாட்சியம்மன் தோன்றி தரணியரசனை கொன்று சுங்கம் உங்களுக்கு எப்போதும் இல்லை என்று சொல்கிறாள்.

அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திம்மராசன் சொல்லிவிட்டார். இதையடுத்து, தாராபுரத்தைச் சேர்ந்த வேலப்ப செட்டியார் என்பவர் ஊரார் முன்பாக தனது தலையை தானே வெட்டி திம்மராசனிடம் முன் வைத்து உயிர்த் தியாகம் செய்கிறார். இதை அறிந்த மன்னர் ராமராயர் வேலப்ப செட்டியாரின் தியாகத்தை மெச்சி, தலைக்கு ஈடாக தங்கத் தலையை கொடுத்து, ‘எசமானன்’ என்கிற பட்டமும் கொடுத்து, அரச மரியாதை செய்கிறார். மேலும், அந்த சமூகத்தினருக்கு இனி எப்போதுமே வெண்கலம் சார்ந்த தொழில்களுக்கு சுங்கம் இல்லை என்று எழுதிக் கொடுத்தார். அந்த சாசனம்தான் இந்த செப்பேடு. எட்டு அங்குலம் அகலமும், பத்து அங்குலம் நீளமும் கொண்ட இந்த செப்பேட்டில் மேற்கண்ட விபரங்கள் 49 வரிகளில் எழுதப்பட்டுள்ளன.” என்றார்.

வரலாற்று ஆய்வாளரும் எழுத் தாளருமான இரா.முருகவேள் எழுதி யிருக்கும் ‘மிளிர்கல்’ வரலாற்று நாவலில் தங்கள் தலையை தாங்களே அறுத்து உயிர்த்தியாகம் செய்பவர் களை பற்றி குறிப்பிட்டிருப்பார். அவரிடம் இதுகுறித்து கேட்டோம். “200 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சமூகத்தில் சுய பலிகள் இருந்தன. மன்னர் உடல் நலம் பெறுவதற்கு, போரில் வெற்றி பெறுவதற்கு மற்றும் ஊர் பொது நன்மைக்கு இதுபோன்ற சுய பலிகள் நடத்தப்பட்டன. இதில் தலை முடியை ஒரு கயிற்றில் கட்டி மரத்திலோ ஒரு கம்பத்திலோ இணைத்து கட்டிவிடுவார்கள். பின்னர் சம்மந்தப்பட்ட நபர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொள்வார். இதன் பெயர் நவகண்டம். இதில் பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும், பெண்களுமே பலியிடப்பட்டனர்” என்றார்.

ஆவணப்படுத்த வேண்டும்

செப்பேடுகளை ஆய்வு செய்து வரும் ஒடிசா பாலு கூறும்போது, ‘‘தமிழ் பேசப்பட்ட நிலங்களில் சுமார் 32 உழவு சார்ந்த சமூகங்களின் ஏராளமான ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. எங்களது ஆய்வில் தமிழகத்தில் சுமார் 500 செப்பேடுகள் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1,000 செப்பேடுகள் கோயில், மடம் மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. செப்பெடுகளை எல்லாம் முறையாக ஆய்வு செய்து வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in