

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'இந்து தமிழ்' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அன்பாசிரியர் 40: கிருஷ்ணவேணி- அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை என்ற அத்தியாயத்தில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் பின் தங்கியவர்கள் என எல்லாத் தரப்பினரும் பள்ளியில் ஒன்றாகப் படிக்க வேண்டும். பள்ளியை ஓவியங்கள் நிறைந்த கலைக்கூடமாக மாற்றவேண்டும் என்று அன்பாசிரியர் கிருஷ்ணவேணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'அன்பாசிரியர்' தொடரைப் படித்த இரண்டு 'இந்து தமிழ்' வாசகர்கள் ஏழைச் சிறுமிகள் இருவரைத் தத்தெடுத்துள்ளனர். தனியார் அமைப்பு ஒன்று இந்த ஆண்டுக்கான காலை இட்லி வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. வாசகர் ஒருவர், 70 ஆயிரம் செலவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தித் தந்துள்ளார். செய்தியைப் படித்த பெற்றோர் இருவர், தங்களின் ஆட்டிசக் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பெருமிதத்துடனும் விரிவாகவும் பகிர்ந்துகொண்டார் அன்பாசிரியர் கிருஷ்ணவேணி.
பாதுகாப்பை உறுதி செய்யும் கேமராக்கள்
''குவைத்தில் பணிபுரியும் பிரேம் குமார் என்னும் வாசகர் 'அன்பாசிரியர்' கட்டுரையைப் பார்த்து என்னைத் தொடர்பு கொண்டு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். என் கோரிக்கையின்படி 70 ஆயிரம் ரூபாயை அனுப்பி சிசிடிவி கேமராக்களை வாங்கச் சொன்னார். பள்ளி வளாகம், வகுப்பறை, சத்துணவு சமையலறை ஆகிய இடங்களில் 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை தற்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
துபாயைச் சேர்ந்த சோகம் ஷெரிஃப் என்பவர் பள்ளியில் படிக்கும் சசிகலா என்ற ஏழைச் சிறுமியைத் தத்தெடுத்துள்ளார். சசிகலாவுக்காக ஷெரிஃப் மாதந்தோறும் ரூ.1,500 அனுப்பி வருகிறார். காலம் முழுக்க உதவி செய்வேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பிரியம்வதா என்னும் வாசகர் தந்தையை இழந்த யாழிசை என்னும் சிறுமிக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாயை அளித்துவருகிறார்.
அதிகரித்த மாணவர் சேர்க்கை
'அன்பாசிரியர்' கட்டுரையைப் படித்த ஆட்டிசக் குழந்தைகள் இருவரின் பெற்றோர் தங்களின் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். செய்தியின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. தற்போது 130 மாணவர்கள் பள்ளியில் பயில்கின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுக்கு சில ஆட்டோ ஓட்டுநர்களால் இயங்கும் 'ஸ்ரீ சக்ரா' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த அமைப்பு இந்த ஆண்டு முழுக்க 50 மாணவர்களுக்கு காலை இட்லிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இட்லிகள் அனைத்தும் அம்மா உணவகத்தில் இருந்து வாங்கப்படுகிறது. இந்த முறையை அன்பாசிரியர் தொடரில் படித்த 6 பள்ளிகள், அங்கும் அம்மா உணவக இட்லியை வாங்கி மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.
கணினி வசதி
எழும்பூர் அரசு ஓவியக் கல்லூரி பேராசிரியர் செந்தமிழ்ச் செல்வன் தேவைப்படும்போது இலவச ஓவியப் பயிற்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல செய்தியைப் படித்த ஆட்டிச ஆசிரியர் ஒருவர், கற்பித்தலில் சந்தேகங்கள் இருந்தாலோ, உதவி தேவைப்பட்டாலோ தயங்காமல் அணுகுமாறு தெரிவித்துள்ளார். நோக்கியா நிறுவன ஊழியர் சரவணன் தன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் (Corporate Social Responsibility) நிதி மூலம் கணினிகள் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்''.
இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய 'இந்து தமிழ் இணையதளத்துக்கு' நன்றி என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் கிருஷ்ணவேணி.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'இந்து தமிழ்' பெருமிதம் கொள்கிறது.
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in