ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் தற்காலிக ரத்து செய்யக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் தற்காலிக ரத்து செய்யக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த போலீஸ் அதிகாரிகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, விதிகளை அமல்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள்  எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தபோது, சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் மற்றும் துணை ஆணையர் அபிநவ் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்,கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நூறு ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அதனை அதிகரிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஒருவர் கூட ஹெல்மெட் அணிவதில்லை, டெல்லி மற்றும் பெங்களூரில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தும் போது தமிழகத்தில் ஏன் அமல்படுத்த முடியவில்லை. அவ்வாறு தொடர்ந்து சட்டத்தை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது. வாகனத்தை பறிமுதல் செய்ய ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா?

பெரும்பாலான காவல்துறையினரே ஹெல்மெட் அணிவதில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?'' என கேள்வி எழுப்பினர்.

 அதற்கு, பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் தொடர்ந்து இடை நீக்கம் செய்யப்படுகின்றனர் என தெரிவித்தார்.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விதிகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என விரிவான விளக்கத்தை, கூடுதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in