Published : 05 Jun 2019 12:29 PM
Last Updated : 05 Jun 2019 12:29 PM

அமமுக லெட்டர் பேட் கட்சி; கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமமுக ஒரு கட்சி அல்ல. வெறும் குழு. கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுக காணாமல் போய், அதன் நிலை பரிதாபகரமாகி விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:

''அமமுக ஒரு கட்சி அல்ல. வெறும் குழு. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் அதை லெட்டர் பேட் கட்சி எனலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, கட்டெறும்பு சிற்றெறும்பாகி, அதுவும் காணாமல் போய்விட்டது. கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுக காணாமல் போய், அதன் நிலை பரிதாபகரமாகி விட்டது.

பிரிந்து சென்ற அதிமுக சகோதர, சகோதரிகள் அமமுகவில் இருந்து மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள். இன்னும் நிறையப் பேர் வரத் தயாராக இருக்கிறார்கள்.

ஸ்லீப்பர் செல் என்று வாய் கிழிய அவர் (தினகரன்) பேசினார். சில தினங்களுக்கு முன்னதாக அவரின் இயக்கத்தில்தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். போகிறவர்கள் எல்லாம் போகலாம் என்று அவரே சொல்லிவிட்டார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பற்று கொண்ட தொண்டர்கள், உடனடியாக அதிமுகவுக்குத் திரும்பி கழகக் கடமையை ஆற்றுங்கள். திமுக எப்போதும் தமிழகத்தை ஆளக்கூடாது என்பது இரு தலைவர்களின் எண்ணம். அதை கழக நிர்வாகிகள் நிறைவேற்றவேண்டும்.

எழுவர் விடுதலையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அரசின் தலைவரான ஆளுநரே அதை முடிவுசெய்ய முடியும். சஞ்சய் தத் வழக்கை இதனுடன் ஒப்பிட முடியாது. தமிழக அரசு எப்போதும் எழுவர் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும்''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x