Published : 10 Jun 2019 17:01 pm

Updated : 10 Jun 2019 17:20 pm

 

Published : 10 Jun 2019 05:01 PM
Last Updated : 10 Jun 2019 05:20 PM

செல்போன் பறித்தவர்களை விடாமல் துரத்திய இளைஞர்; மோட்டார் சைக்கிளை விட்டு ஓட்டம்: சிசிடிவி உதவியால் 3 பேர் கைது

3

தேனாம்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை சிசிடிவி உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, தேனாம்பேட்டை, சீத்தாம்மாள் சாலையில் வசிப்பவர் சரவணன் (45). அடையாறில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். சரவணன் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் பணி முடிந்து டிடிகே சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சரவணனின் செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் சுதாரித்துக் கொண்டு அவர்களது இருசக்கர வாகனத்தைப் பிடித்துக்கொண்டார். இதனால் தப்பிக்க முயன்ற அவர்கள் 3 பேரும் கீழே சரிந்து வாகனத்துடன் விழுந்தனர்.

இரண்டு பேர் தப்பித்து ஓட, ஒருவனைப் பிடித்துக் கொண்டார். இருவரும் கட்டிப்புரண்டு உருண்டனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வரவே, அந்த நபரும் தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுக்காமல் தப்பி ஓடினார். செல்போனும், மோட்டார் சைக்கிளும் சிக்கிய நிலையில் சரவணன் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றினர். பின்னர் சரவணனிடம் விசாரணை நடத்தினர். சரவணன் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தைக் கொண்டும், சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது. திருடுபோன பைக்கின் உரிமையாளர் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என போலீஸார் கண்டுபிடித்தனர். அவர்கள் பழைய குற்றவாளிகள் என்பதால் எளிதாக அடையாளம் காண முடிந்தது.

இதையடுத்து செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய மயிலாப்பூர், பி.என்.கே. காலனியைச் சேர்ந்த கிஷோர் (22), கே.கே.நகர், எம்.ஜி.ஆர் மார்க்கெட்டைச் சேர்ந்த பழனி (22), தேனாம்பேட்டை, பருவா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (எ) வாண்டு மணி(24) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட கிஷோர் மீது திருட்டு வழக்குகளும், பழனி மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகளும், மணிகண்டன் (எ) வாண்டு மணி மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகள் மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


செல்போன் பறிப்பு திருடர்கள்திருட்டு மோட்டார் சைக்கிள்செல்போன் பறிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x