நீட் நுழைவுத் தேர்வால் வெற்றி; முன்னேறிய வகுப்பினர் 7,04,335 பேர், பிற்படுத்தப்பட்டோர் 63,749 பேர், பட்டியல் இனத்தினர் 28,464: மக்களவையில் டி.ஆர்.பாலு தகவல்

நீட் நுழைவுத் தேர்வால் வெற்றி; முன்னேறிய வகுப்பினர் 7,04,335 பேர், பிற்படுத்தப்பட்டோர் 63,749 பேர், பட்டியல் இனத்தினர் 28,464: மக்களவையில் டி.ஆர்.பாலு தகவல்
Updated on
4 min read

நீட் நுழைவுத்தேர்வால் முன்னேறிய வகுப்பினர் 90 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 9 சதவீதமும், பட்டியல் இனத்தவர் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களும் தேர்வானதாக மக்களவையில் நேற்று டி.ஆர்.பாலு பேசினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று பேசியதாவது:

“இங்கே நான் பிரதமருக்கு எதிராக எது பேசினாலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு எதிரானது டி.ஆர்.பாலு பேச்சு என்று எடுத்துக்கொள்ளாமல் பிரதமருக்கு எதிரானது என்று மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரின் உரையில் எதுவுமே இல்லை. பாஜகவின் வெற்றி என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் வந்ததுதான். எதிர்க்கட்சிகளின் பலவீனத்தின் காரணமாகத்தான் ஆட்சியில் இருந்த பாஜக, மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது.

குடியரசுத் தலைவரின் உரையின் போதும், அதற்கடுத்தும் காலை முதலே இந்த அவையில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்களின் உணர்வுகள், அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உணர்வுகள் அதில் நிறைவடையவில்லை.

சிறுபான்மையினரும் அதில் அடக்கம். நாடாளுமன்ற மைய அவையில் குடியரசுத் தலைவர் எதைப் பேசினாலும் சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக அது நிச்சயம் இருக்கும் என்று மேலே குறிப்பிடப்பட்டவர்கள் எண்ணுவார்கள்.

ஆனால், குடியரசுத் தலைவரின் உரை நிச்சயம் பல்வேறு குறைபாடுகளுடனும், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமலும் இருந்ததை அறிய முடிந்தது. அவர் பல்வேறு உறுதிமொழிகளைத் தெரிவித்திருந்தார். ஆனால் அவை நிறைவேற்றப் படவில்லை. இத்தகைய நிலையில் மேலும் பல உறுதிமொழிகளை அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்னாயிற்று? அப்போது தேர்தல் அறிக்கையில் பிரதமர் என்ன தெரிவித்தார் என்றால், இந்த அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயுள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணத்தைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுத்து இந்தியாவிற்குக் கொண்டுவந்து இங்குள்ள ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறியிருந்தார். அந்த உறுதிமொழி என்னவாயிற்று? ஒன்றும் ஆகவில்லை.

இந்த நாட்டிலுள்ள இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்தார். ஆண்டுதோறும் இரண்டு கோடி பேர் என்றால் இந்த ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு அனைத்து இளைஞர்களும் வேலை பெற்றிருப்பார்கள்.

இந்த ஜூன் 24 குடியரசுத் தலைவரின் உரையிலும் தொழிற்கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு அதன்மூலம் வேலையற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அளித்த உறுதிமொழியின்படி 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இன்றைக்குக் கூட 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பின்றி இருப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்திருந்தால் அது ஓரளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால், அதை அவர் செய்யவில்லை.

தேவையில்லாமல் 12-ம் வகுப்பு (10+2) முடித்தவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த 10+2 தேர்வு மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஆனால் நீட் தேர்வோ சிபிஎஸ்இயின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடிப்படையில் நடைபெறும் (நீட்) தேர்வில் பங்கேற்று வெற்றி பெற முடியும்? அதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

கடந்த 2, 3 ஆண்டுகளாக சொல்லொணாத் துயரத்திற்கு மாணவர்கள் ஆளாகிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் முன்னேறிய வகுப்பினர் 7,04,335 பேர். பிற்படுத்தப்பட்டோர் 63,749 பேர். ஆதிதிராவிட வகுப்பினர் 20,009 பேர். பழங்குடியினர் 8,455 பேர். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் எந்த அளவிற்கு வாய்ப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும் மற்றவர்கள் சேர முடியாமல் இருக்கிறார்கள் என்பதும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் உள்ள எங்கள் மாணவர்களும், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு 2007-ம் ஆண்டே எங்கள் தலைவர் மறைந்த கலைஞர் சட்டப்பேரவையில் ஒரு மசோதாவினை நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியும் வைத்தார்.

குடியரசுத் தலைவரும் அதற்குரிய ஒப்புதலை அளித்த பிறகு 2007 ஆம் ஆண்டு முதல் அது நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் அரசாங்கம் அது தொடர்பான தேர்வை நடத்த முற்பட்டது. அதன் பிறகு பிற்படுத்தப் பட்டவர்கள், ஆதிதிராவிட மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்து விட்டனர்.

இந்த முறையை ஒழிக்க பிரதமர் உடனடியாக முன்வர வேண்டும். 29 மாதங்களுக்கு முன் தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது இந்த அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசோ அமைதியாக இருந்து வருவதோடு, அது குறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்க வில்லை.

இந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றோ, அல்லது அரசு அது குறித்து கவனித்து வருகிறது என்றோ இதுவரை தெரிவிக்கப்படவேயில்லை. நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்த பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களில் ஒரு சில மாணவர்கள் - அரியலூரைச் சேர்ந்த அனிதா, விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா, திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, புதுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா மற்றும் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களின் பெற்றோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வளர்ந்த நாடான இங்கிலாந்திலும் நெட் – தேசிய நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்தி வந்தது.

அதில் பங்கேற்ற அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் ஒரு சதவிகிதம்; தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 5 சதவிகிதம் என்கிற அளவில்தான் தேர்ச்சி பெற்றனர். இதைக் கருத்தில் கொண்டு இது போன்ற தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இங்கிலாந்து நாட்டில் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய இதுதான் உகந்த நேரம் என்பதால் மத்திய அரசு உடனடியாக அதற்காக முன்வரவேண்டும். இன்னொரு முக்கியப் பிரச்சினை - படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை. கோடிக்கணக்கானவர்கள் வேலையின்றித் தவிக்கிறார்கள். அதன் காரணமாக மதக் கலவரங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனவே, இப்பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

பாசன நீர் என்பதே இல்லை. குறிப்பாக தமிழகத்தில் கடைமடைப் பகுதியில் வசிக்கின்ற விவசாயிகள், பொதுமக்கள் காவிரி தண்ணீரின்றித் தவிக்கின்றனர். மேட்டூர் அணைக்கு கர்நாடக அரசுதான் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசோ தண்ணீர் வழங்க மறுக்கிறது. அதிலும் குறிப்பாக ஏற்கெனவேபயிர்கள் பயிரிட்டுள்ள நிலையில் இந்த பருவ காலத்திற்குரிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு வழங்காமல் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி, 9.19 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவும் அப்படியே உள்ளது. ஆனால், அந்த அளவிற்கு இதுவரை தண்ணீர் வழங்கப் படவில்லை. ஏறத்தாழ 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைய அரசையும், பிரதமரையும் இதில் உடனடியாகத் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால், மைய அரசோ தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. நீரின்றி பயிர்கள் முறையாக சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக முன்வந்து மேலும் தாமதம் செய்யாமல் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் .

தமிழ் மொழி ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலப் பிரச்சினையாக இருக்கிறது. தமிழ்மொழி இன்னமும் சக்தி வாய்ந்த, துடிப்பான, வளமிக்க மொழியாக இருக்கின்ற காரணத்தால் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.

அரசியலுக்கு அப்பால் தமிழக மக்கள் அனைவரும் தமிழ் ஆட்சி மொழியாவதில் ஆர்வமாக உள்ளனர். அதில் என்ன தவறு? குறைந்தபட்சம் இப்போதாவது தமிழகத்திலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக அறிமுகப் படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

அதுதான் எங்களுக்கும் தேவை. ஆனால், எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல; அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில மொழிகளை அரசு அலுவலகங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் அறிமுகப்படுத்த முன்வரவேண்டும்.

எப்பேர்பட்ட மொழியாக இருந்தாலும் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழியை ஆட்சி மொழியாக அறிமுகம் செய்ய முன்வர வேண்டும்.

மகளிர் இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. அது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களவை கூடும் போதெல்லாம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப் பட வேண்டும் என்றும் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எதுவுமே நடைபெற வில்லை.

என்னுடைய கட்சி இதை முழு மனதாக ஆதரிப்பதோடு, தவறாமல் இந்தக் கூட்டத் தொடரிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு டி.ஆர் பாலு மக்களவையில் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in