

தேவாரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோரை கொன்ற ஒற்றை யானையை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஒற்றை யானையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரியளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பலரும் ஆவேசமாக பேசினர்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் ஜவஹரிபாய், மாவட்ட வனஅலுவலர் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில், பெரியாறு அணைநீரை குழாய் மூலம் ஆண்டிபட்டி கணவாய்க்கும் கொண்டு வரும் திட்டத்திற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. இவற்றை கால்வாய் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வழிநெடுகிலும் நிலத்தடிநீர் மட்டம் உயரும்.
தேவாரம் பகுதியில் யானை தாக்கி 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். யானையை இடமாற்றவோ, வருவதைத் தடுக்கவோ வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இறப்பிற்கான இழப்பீடு ரூ.3 லட்சத்தைப் பெற அலைய வேண்டியதுள்ளது. கேரளாவில் யானை தாக்கி இறந்தால் ரூ.10லட்சம் தரப்படுகிறது. உயிரை விட பணம் முக்கியமல்ல. விவசாயிகள் உயிர்பயத்துடன் விவசாயம் செய்ய வேண்டியதுள்ளது. 6 மணிக்கு மேல் தோட்டத்திற்கு போக வேண்டாம் என்று மட்டும் வனத்துறை தடை விதிக்கிறது.
யானையின் உடலில் சிப் பொருத்தி அது வரும் இடங்களை கண்டறிந்து விவசாயிகளை எச்சரிக்கலாம்.
வனத்துறையினர்க்கு மட்டும்தான் குடும்பம் இருக்கிறதா? எனவே எங்களின் நிலை உணர்ந்து மயக்கஊசி போட்டு இந்த ஒற்றை யானையை பிடித்து வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும்.
இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றனர்.
இதே கருத்தை வலியுறுத்தி பலரும் ஆவேசமாக பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் கவுதம் கூறுகையில், "6 யானைகளில் இந்த ஒரு யானை மட்டும்தான் விவசாயிகளுக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. இவற்றை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரூ. 1 கோடி செலவில் இதற்காக நிதி கோரப்பட்டுள்ளது. சோலார், அகழி, முட்கள் என்று மூன்று வகையான வேலிகள் அமைக்கப்படும். கண்காணிப்புக் கோபுரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குரங்கணி-டாப் ஸ்டேஷன் ரோடு நடைபாதை உரிமத்திற்கு மட்டுமே. ஆடுகளைக் கூட இதில் கொண்டு செல்லக் கூடாது. இதில் ரோடு போட சட்டம் அனுமதிக்காது" என்றார்.
முன்னதாக அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்து தோட்டக்கலைத்துறை உதவிப்பேராசிரியர் கண்ணன் விளக்கம் அளித்தார்.
இஅடங்கல் எனும் செயலி மூலம் விவசாயிகள் தாங்களே பயிர்விபரங்களை பதிவேற்றம் செய்யும் முறை குறித்து பயிற்சியாளர் பிரீத்தி விளக்கினார்.
மேகமலை வன உயிரின காப்பாளர் துக்காராம் சச்சின் போஸ்லே, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.