Published : 01 Jun 2019 01:47 PM
Last Updated : 01 Jun 2019 01:47 PM

தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள்; பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு

தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் திருமணம் உதவி திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.24,000/-லிருந்து ரூ.72,000/-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு:

தமிழ் நாடு அரசின் வளர்ச்சி திட்டங்களில் மகளிர் நலம் முக்கியமான ஒன்றாகும். பெண் குழந்தைகள், மகளிர் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையிலும், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை  எட்டும் வகையிலும், தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதரவற்ற பெண்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினர் ஆகியோரை மேம்படுத்தவும், சமநிலை அடையவும் பல சிறப்புத் திட்டங்களை தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன்பெற இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.24,000/-லிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்தி  தமிழகஅரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களுக்கான வருமான வரம்பினை மேலும் உயர்த்தினால், அதிக அளவு ஏழைகள் பயன்பெறுவர் என்பதனால், திருமண நிதி உதவித் திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப் போலவே, சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.24,000/-லிருந்து ரூ.72,000/-ஆக உயர்த்தி நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பினை உயர்த்துவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலான பயனாளிகள் பயனடைவர்” இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x